ஒரே பாணியில் நடித்து அலுத்துப் போனதால், விதவிதமான வேடங்களில் நடிப்பதில் திரிஷா ஆர்வம் காட்டி வருகிறார். ‘தூங்காவனம்’ படத்தில் திரிஷா அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். கமலுடன் திரிஷா மோதும் சண்டை காட்சி அவருக்கு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது.
இதில் கமல் திரிஷாவின் கையை முறுக்கி பின்புறமாக மடக்கி முறிப்பது போல தெரியும். திரிஷாவும் கடுமையாக வலிப்பது போன்று முகபாவம் காட்டுவார். சண்டை முடிந்ததும் திரிஷாவின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டது போன்ற காட்டுவார்கள். முறிந்த கைக்கு கட்டுப்போட்டுக் கொண்டு வருவார்.
இந்த காட்சியில் நடித்தது குறித்து திரிஷா கூறும்போது, ‘முதலில் சண்டைக் காட்சியில் நடிக்க வேண்டும் என்றதும் மிகவும் பயந்தேன். ஆனால் கமல் சார் எனக்கு தைரியம் கொடுத்தார். அந்த சண்டை காட்சி இரண்டே நாளில் படமாக்கப்பட்டுள்ளது.
நான் முதன் முதலில் நடித்த சண்டைகாட்சியில் எனக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை. அந்த அளவுக்கு கமல் சார் அந்த காட்சியில் நடித்தார். இந்த படத்தில் நடித்த பிறகு தொடர்ந்து சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து இருக்கிறது’ என்றார்.