நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை: யுவன்சங்கர் ராஜா பேட்டி

yuvan-shankar-rajaஇசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“என்னையும் என் அப்பா இளையராஜாவையும் ஒரு துளி கூட ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அவர் எங்கோ இருக்கிறார். நான் எங்கோ இருக்கிறேன்.

நான் இப்போது தான் எல்லா விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது தருமி என்ற புதிய படத்திற்கு இசை அமைத்துக் கொண்டிருக்கிறேன். படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இதுவரை வந்ததில்லை.

ஆனால் படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகம் இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக தயாரிப்பில் ஈடுபடுவேன்.

என் வாழ்வில் முழுமையான வெற்றி கிடைத்து விட்டதாக நான் இதுவரை நினைக்கவில்லை. வெற்றிக்காக தினம் தினம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு போட்டியாக நான் என்னை தான் நினைக்கிறேன். இளம் இசை அமைப்பாளர்கள் அதிக அளவில் தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு நான் போட்டி அல்ல. அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நல்ல நண்பனாக தான் நான் இருப்பேன்… இருக்கிறேன். மதுரையில் எனக்கு பிடித்த விஷயம் உணவு மட்டுமே.

மதுரை என்றால் எனக்கு நினைவுக்கு வரும் ஒரே விஷயம் சாப்பாடு தான். ‘வாய்ஸ் ஆப் யுவன்‘ இசை நிகழ்ச்சி மலேசியா, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தி இருக்கிறோம்.

ஆனால் இதுவரை மதுரையில் இந்த நிகழ்ச்சியை நடத்த எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே ‘வாய்ஸ் ஆப் யுவன்‘ இசை நிகழ்ச்சியை வருகிற ஜனவரி மாதம் 26-ந்தேதி மாலை 6 மணிக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம்.

நிகழ்ச்சியில் என்னுடன் இதுவரை பணிபுரிந்த பாடகர்கள், சினிமா டைரக்டர்கள், நடிகர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

மேலும் இசைஞானி இளையராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பணத்தை புற்றுநோய், எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க இருக்கிறோம்.

இவ்வாறு யுவன் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online