சென்னையை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் அனைத்து துறைகளையும் முடங்கச் செய்து விட்டது.
கடந்த ஒரு வாரமாக திரைப்படத்துறை முழுவதுமாக செயல்படவில்லை. சென்னையில் நடைபெற இருந்த படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. சின்னத்திரை படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை.
சென்னை நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கான திரை அரங்குகளும் செயல்படவில்லை. கடந்த 4–ந்தேதி திரைக்கு வர இருந்த ரஜினிமுருகன், ஈட்டி படங்கள் மழை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருந்த தூங்காவனம், வேதாளம் பட காட்சிகளும் மழை காரணமாக 5 நாட்களுக்கும் மேலாக நடைபெறவில்லை. பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டதால் வழக்கமான வசூல் பாதிக்கப்பட்டது.
இதுபோல சமீபத்தில் வெளியான இஞ்சி இடுப்பழகி, 144, உப்புக்கருவாடு, உறுமீன் போன்ற படங்களும் எதிர்பார்த்த வசூலை தொடமுடியாத நிலை ஏற்பட்டது. இவை மட்டுமல்லாமல் ஓடிக்கொண்டிருந்த மற்ற படங்களும் மழை காரணமாக சில தினங்கள் நிறுத்தப்பட்டன.
சென்னை மட்டுமல்ல, மழையால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களிலும் திரைப்படங்கள் பல நாட்கள் ஓடவில்லை. படங்கள் திரைக்கு வரும் முதல் 2 வாரங்களில்தான் அதிக வசூல் எதிர்பார்க்கப்படும். சில படங்கள் ஒரு வாரத்துக்கு பிறகு சூடு பிடிக்கும்.
ஆனால் அடைமழையும், வெள்ளமும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்த படங்களில் இருந்து சமீபத்தில் வந்த படங்கள் வரை அனைத்து படங்களின் வசூலுக்கும் அணை போட்டு விட்டது.
நேற்று முதல் திரை அரங்குகள் ஓரளவு செயல்பட தொடங்கி உள்ளன. விட்ட வசூலை இந்த படங்கள் எட்டிப்பிடிக்குமா? என்பதை இனிதான் பார்க்க வேண்டும்.