MENUMENU

பீப் சாங் சர்ச்சையில் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் எனக்கு ஆதரவளிக்கவில்லை: சிம்பு கவலை பேட்டி

Simbu1நடிகர் சிம்பு எழுதி, பாடி இணையதளத்தில் வெளியிடப்பட்டதாக கடந்த வாரம் வெளிவந்த ‘பீப் சாங்’ மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிம்பு மீதும், அந்த பாடலுக்கு இசையமைத்ததாக கூறி இசையமைப்பாளர் அனிருத் மீதும் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், பல்வேறு தரப்பினரும் இந்தப் பாடலுக்கு எதிராகவும், சிம்புவுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிம்பு சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, இந்த சர்ச்சை பற்றி எழுப்பியவர்களுக்கு நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.

இந்தப் பாடல் எந்த படத்திலாவது இடம்பெற்றிருக்கிறதா? எந்த டி.வி. சேனலிலும் வெளியாகியிருக்கிறதா? இல்லையென்றால், எந்த ரேடியோவிலாவது இந்தப் பாடல் ஒலிக்கிறதா? அப்புறம் ஏன் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள் என்று புரியவில்லை.

இந்தப் பாடலை நான் இயற்றியது உண்மைதான். அதை ஒப்புக் கொள்கிறேன். இந்த பாடலுக்கும் அனிருத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்தில் ஒரு பாடல் எப்படி கசிகின்றது? என்பதை யாராலும் சொல்லமுடியாது.

இந்தப் பாடலை நான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தால், அதனால் ஏற்படும் எந்த பிரச்சினைக்கும் நான் பதில் கொடுக்க தயாராக இருக்கிறேன். நான் எல்லாவற்றையும் எதிர்கொள்ள தைரியமுள்ளவன்தான். யாருக்கும் பயப்படக்கூடிய ஆள் கிடையாது. கடவுளுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்.

என்னுடைய பாடல்கள் குழந்தைகள்வரை சென்றடைகிறது என்பதை இந்தப் பாடலை வைத்து யாரும் சொல்லாதீர்கள். டி.வி.யில், தியேட்டரில் போடுகிற பாடல்கள்தான் குழந்தைகளிடம் போய் சேரும். இந்தப் பாடல் இணையதளத்தில்தான் இருக்கிறது.

அப்படியென்றால், இணையதளத்தில் ஆபாச படங்களும் இருக்கின்றன. அவை குழந்தைகளிடம் போய் சேராதா? என்னுடைய பாடலை மட்டும்தான் குழந்தைகள் கேட்கும், ஆபாச படங்களை பார்க்காது என்றால் என்ன நியாயம்?

நிறைய பாடல்களில் பெண்களை பற்றி வெட்டுறா அவள, குத்துறா அவள என்று சொல்லிப் பாடுகிறார்கள். அதையெல்லாம் போய் கேட்கவில்லை.

ஆண்களை தண்ணியடிக்காத, இந்த மாதிரி நாசமா போகாத, பொண்ணுங்கள தேவையில்லாம திட்டாத, உன்னுடைய தவறுகளுக்காக ஏன் இப்படியெல்லாம் செய்யுற, உனக்குன்னு ஒரு பொண்ணு வருவா என்று சொல்லி ஒருநல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறேன். பொண்ணுங்களுக்கு ஆதரவாதான் இந்தப் பாடலை எழுதியிருக்கிறேன்.

எனக்கு உண்மையிலேயே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் பொண்ணுங்களுக்கு எதிரா பாட்டு எழுதியிருக்கேன்னு சொல்லுறாங்க. எனக்கு அதிகளவில் ரசிகர்களாக இருப்பதே பொண்ணுங்கதான்.

இந்தப் பிரச்சினை சிம்பு என்கிற தனிமனிதனை மட்டுமே குறிவைத்து தாக்கவேண்டும் என்ற நோக்கில் எழுப்பப்படுகிறது. எனக்கு இதெல்லாம் பெரிய பிரச்சினையே கிடையாது.

என்னை பெரிய அளவில் இழிவுப்படுத்தியிருக்கிறார்கள். நான் என்ன சொன்னேன்? என்பதைக்கூட யாரும் சரியாக கேட்கவில்லை. என்னை கேள்வி கேளுங்கள், நான் தப்பு சொல்லவில்லை.

நான் அதிகாரப்பூர்வமாக இந்த பாடலை வெளியிட்டிருந்தால் கேள்வி கேட்டால் நியாயம் இருக்கிறது.

நான் வெளியிடாத ஒரு பாடலுக்கு, அதுவும் இணையதளத்தில் திருடிப்போட்ட ஒரு பாடலுக்கு என்னை இவ்வளவு தூரம் காயப்படுத்தி என்னுடைய இமேஜை கெடுத்துட்டாங்க. நான் தப்பு செய்தால் முதல் ஆளாக வந்து மன்னிப்பு கேட்பேன். நான் ஓடிப்போகிற ஆளோ, யாருக்கும் பயப்படுகிற ஆளோ கிடையவே கிடையாது.

30 வருடமாக நான் இந்த சினிமாவில் இருந்திருக்கிறேன். இன்றைக்கு ஒரு பாடலை நான் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை, யாரோ திருடி எடுத்து வெளியிட்டதற்காக ஒரு விளக்கமும் கொடுத்திருக்கேன். அதையும்மீறி என் உருவ பொம்மையை எரித்து, என்னை இழிவுபடுத்தி பேசுறாங்க. அப்படி என்னங்க நான் தவறு செய்துவிட்டேன்?.

இன்றைக்கு ஒரு கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவன் வெளியே வருகிறான். 30 வருடம் இந்த தமிழ் சினிமாவில் தமிழ் மக்களுக்காக நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன்.

நான் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத ஒரு பாடலுக்கு என்னை கேள்வி கேட்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் தமிழ் சினிமாவை சேர்ந்த யாரும் எனக்கு ஆதரவாக வரவில்லை. கூடஇருந்தவர்களே எனக்கு உதவி செய்யவில்லை.

இப்பவும் சொல்கிறேன், தமிழ் மக்கள் என்றைக்குமே என்னை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் எதை பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. தப்பு செய்திருந்தால், தப்பு செய்திருக்கிறேன் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறவன், நான்.

யாருக்கு பயந்தும் ஓடிப்போகிற ஆள் கிடையாது. இதற்கு பிறகு நீங்கள் இந்த விஷயத்தை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், எனக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை கிடையாது என்று அந்த பேட்டியின்போது சிம்பு கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online