MENUMENU

பீப் பாடல் விவகாரம்: சிம்புவை கைது செய்ய சென்னை போலீஸ் தீவிரம்

beep-songநடிகர் சிம்பு பாடிய ஆபாச பீப் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணைய தளங்களில் வெளியானது.

என்னா …க்கு லவ் பண்றோம் என்று தொடங்கும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ள 2–வது வார்த்தையே பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வார்த்தையை மறைப்பதற்காக பீப் என்ற இசை பின்னணியில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் தாண்டி குறிப்பிட்ட வார்த்தை என்ன என்பதை தெளிவாக உணர முடிகிறது. இதுவே அந்த பாடலை பாடிய சிம்புவுக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

யூடியூப்பில் வெளியான இந்த பாடல் தற்போது செல்போனில் வாட்ஸ்அப் மூலமாக பட்டிதொட்டியெங்கும் பரவி விட்டது. இந்த பாடலை முதலில் இணைய தளத்தில் கண்டுபிடித்து, கோவையைச் சேர்ந்த பெண்கள் அமைப்பினர்தான் புகார் செய்தனர்.

இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு மீதும், அந்த பாடலுக்கு இசை அமைத்திருப்பதாக கூறப்படும் அனிருத் மீதும் 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், பால் முகவர்கள் சங்கம் மற்றும் பெண்கள் அமைப்புகளின் சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது.

இதன் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தகவல் தொழில்நுட்ப சட்டம் 67, இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி.) 292 ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் கைது செய்யாமல் இருப்பதற்காக சிம்பு சார்பில் ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று காலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் வக்கீல் முகமது ரியாஸ், சிம்புவின் சார்பில் மூத்த வக்கீல் முத்துக்குமாரசாமி, வக்கீல் தியாகேஸ்வரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

முகமது ரியாஸ் வாதிடும் போது, மனுதாரரின் பாடலில் கெட்ட வார்த்தை இடம் பெற்றுள்ளது சாதாரண பிரச்சினை இல்லை. சமுதாயத்தை அது பாதிக்கும்.

இந்த வழக்கில் சிம்புவை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் உண்மை நிலவரம் தெரிய வரும். அவரது குரலையும், பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது.

பாடலை வெளியிட்டவரையும் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட இணைய தளத்துக்கு கடிதம் எழுதி அதனை அழிக்க வேண்டியுள்ளது. மனுதாரரை (சிம்புவை) கைது செய்தால் மட்டுமே இந்த நடவடிக்கைகளையெல்லாம் மேற்கொள்ள முடியும் என்று வாதிட்டார்.

சிம்புவின் சார்பில் ஆஜரான வக்கீல் முத்துக்குமாரசாமி கூறும்போது, ‘‘சிம்பு மீது ஜாமீனில் வெளி வரக்கூடிய சட்டப்பிரிவுகளில்தான் வழக்கு போடப்பட்டுள்ளது. இதற்காக அவரை காவலில் வைத்து விசாரிக்க தேவையில்லை என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.ராஜேந்திரன், பொதுவாழ்வில் பிரபலமாக இருப்பவர்கள் ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து பேச வேண்டும். பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் பிரபலமானவர்களை சிறு வயதுக்காரர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர் என்றும் கருத்து தெரிவித்தார்.

பின்னர் பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் சண்முகவேலாயுதம் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறும்போது, இந்த பாடலை கண்டித்து தினமும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடக்கின்றன. சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே சிம்புவுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று கூறினார்.

2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிம்புவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 4–ந் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்று எல்லா மனுக்கள் மீதும் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்படி ஜனவரி 4–ந்தேதி அன்று சிம்புவின் முன்ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

நேற்று சிம்புவுக்கு முன் ஜாமீன் கிடைத்திருந்தால் அவர் கைது நடவடிக்கையில் இருந்து எளிதாக தப்பி இருப்பார். ஆனால், அதற்கு மாறாக அவரது முன் ஜாமீன் மனு தள்ளியே வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிம்புவை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

போலீஸ் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக சிம்பு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சிம்பு தமிழகத்தை விட்டே தப்பி ஓடி தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படையினர் தேடி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சிம்பு எங்கு இருக்கிறார் என்பது பற்றி கேள்வியும் எழுந்துள்ளது. அவரது செல்போன் கடந்த 10 நாட்களாகவே சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பதில் சிக்கல் நீடிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும் சிம்புவின் நெருங்கிய நண்பர்கள் உறவினர்களின் செல்போன்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் வேகமாக சிம்புவை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பீப் பாடலை இணைய தளத்தில் யூடியூப் மூலமாக தான் வெளியிடவில்லை என்றும் அதனை யாரோ திருடி வெளியிட்டு விட்டார்கள் என்றும் சிம்பு கூறியுள்ளார். இதையடுத்து சர்ச்சைக்குரிய பாடலை திருட்டுத்தனமாக வெளியிட்டது யார்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து அமெரிக்காவில் உள்ள யூடியூப் தலைமையகத்துக்கு சென்னை போலீசார் மெயில் ஒன்றையும் அனுப்பியுள்ளனர். அதில், ‘‘பீப் பாடல் பற்றிய விவரங்களை தெரிவித்து அதனை வெளியிட்டவர் யார் என்பதை கண்டுபிடிக்க உதவி செய்ய வேண்டும்’’ என்று கேட்டுள்ளனர்.

முதல் முறை அனுப்பிய மெயிலுக்கு சரியான பதில் வராத நிலையில் 2–வது தடவையும் இந்த மெயில் போலீசாரால் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடக்தக்கது.

இதன் மூலம் பாடலை வெளியிட்டவரை கண்டுபிடித்து கைது செய்யவும் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பீப் பாடல் விவகாரத்தை பொறுத்தவரையில், சிம்புவுக்கு திரை உலகினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், பெண்கள் அமைப்பினர், மாணவ–மாணவிகள் மத்தியிலும் கடும் அதிருப்தியே நிலவி வருகிறது.

அதே நேரத்தில் ஐகோர்ட்டிலும் அரசு தரப்பின் கடும் எதிர்ப்பு காரணமாக சிம்புவுக்கு உடனடியாக முன்ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் ஆபாச பாடல் விஷயத்தில் சிம்புவுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online