சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிம்பு பாடி பதிவு செய்து, வேறு வரிகளைப் போட்டு நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பாடலை, அவருக்கு தெரியாமல் பொது மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்ட நினைத்து சிம்புவின் எதிர்காலத்தோடு விளையாட நினைத்திருக்கும் ஒரு குற்றவாளியின் செயலுக்கு சிம்பு பலியாடாகி அவமானப்பட நேர்ந்திருக்கிறது.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வரும் அவரது தந்தை டி.ஆர். இதற்கான விளக்கத்தை கண்ணீரோடும் கவலையோடும் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து சிம்புவின் தாயாரும் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். எனவே இதை மேலும் மேலும் பெரிதுபடுத்தாமல் இதை மீண்டும் மீண்டும் பேசியும், எழுதியும் வெளிப்படுத்தி வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.
சிம்பு பாடிய ஒரு ஆபாச அல்லது தவறான சொல்லுக்காக அவரை வலை போட்டு தேடுவதாகவும், அவர் சம்பந்தப்பட்ட தொழில்களை முடக்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அவர் ஒரு ஆபாசச் சொல்லை உச்சரித்ததை தவிர வேறு என்ன பேசியிருக்கிறார்? அவர் விமானம் கடத்தினாரா? வெடிகுண்டு வீசி உயிர்களை பலிகொண்டாரா? பாலியல் பலாத்காரம் செய்து பல பெண்களை அழித்தாரா?.
விளையாட்டுத்தனமாக, யாரையும் புண்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கம் ஒரு துளி கூட இல்லாமல் உச்சரித்திருக்கக் கூடிய ஒரு சொல்லுக்காக ஏன் அவர் மீது இவ்வளவு காட்டம் கொண்டு தாக்குதல்கள் நடக்கின்றன என்பது எனக்கு புரியவில்லை.
தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பதே தெய்வப் பண்பு என்ற அடிப்படையில், நமது வீட்டில் நமது மகன் விளையாட்டுத் தனமாக செய்த ஒரு தவறை மறந்து மன்னித்து விடுவதைப் போல், சிம்பு செய்திருக்கும் தவறை மன்னிப்போம்.
இத்தவறு மன்னிக்கப்பட வேண்டியது தானே தவிர தண்டிக்கப்பட வேண்டியது அல்ல என்பதை ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன். சிம்பு சட்டத்தை மதித்து சட்ட ரீதியாக இப்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.