கன்னியாகுமரியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் பாரத பண்பாட்டு கலாசார வழிபாட்டு யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசையமைப்பாளர் கங்கை அமரன் கன்னியாகுமரி வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல மொழிகளில் 200 படத்துக்கும் மேல் இசையமைத்துள்ளேன். இது தவிர இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தின் பக்தி பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். 1000 படங்களுக்கு மேல் என்னுடைய அண்ணன் இளையராஜா இசையமைத்துள்ளார். அவரை அண்ணனாக பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
அந்த காலத்து பழைய பாடல்கள் இப்போது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஆனால் இப்போதுள்ள புதிய பாடல்கள் படம் முடிந்தவுடன் மறந்து விடுகிறது. தற்போதுள்ள பாடல்கள் ஆங்கில பாடல்களை போல் உள்ளது. ‘பீப்‘ பாடலை சிம்பு ஆபாசமாக பாடியது தவறு தான். நான் பா.ஜனதாவில் சேர முக்கிய காரணம், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் எனக்கு பிடித்திருந்தது.
இளைஞர்களை எழுச்சி பெறுகிற விதத்திலும், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற விதத்திலும் அவருடைய நடவடிக்கைகள் இருந்தது. வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
ஆனால் பா.ஜனதாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வேன். தேர்தல் பிரசார பாடல்களை பாடுவதற்கும் தயாராகி வருகிறேன். தமிழ்நாட்டில் பா.ஜனதாவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
இந்தியாவை வல்லரசாக்குவதற்காக மோடி வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவருடைய பயணத்தால் இந்தியாவுக்கு நன்மை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.