MENUMENU

மீனாட்சி காதலன் இளங்கோவன் – திரை விமர்சனம்

Meenakshi-Kadhalan-Elangovan-Movie-Review-and-Rating-Story-Updatesநாயகி அபினிதா குடும்பத்துக்கும், நாயகன் சாரதியின் குடும்பத்துக்கும் நான்கு தலைமுறையாக பகை இருந்து வருகிறது. இதனால், இருவருடைய குடும்பத்துக்கும் அடிக்கடி சண்டை நடக்கிறது. இந்த பகை நீண்டுகொண்டே செல்வதால், இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அபினிதாவும், சாரதியும் காதலிக்க முடிவெடுக்கிறார்கள்.

இதனால் தங்களது குடும்பத்தில் உள்ள பகை தீர்ந்துபோகும் என நினைக்கிறார்கள். ஆனாலும் பகை தீர்ந்தபாடில்லை. இவர்களது காதலுக்கும் அவர்களால் எதிர்ப்பு வருகிறது.

இதனிடையே, அந்த ஊரிலேயே இருக்கும் மைனர் சரவணன், திருமணமாகியும் நீண்டநாட்களாக குழந்தை இல்லாததால், இவர்களுடைய காதலுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். தன்னுடைய வீட்டிலேயே அடைக்கலம் கொடுக்கிறார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடு செய்கிறார்.

ஆனால், அபினிதாவுக்கு 18-வயது பூர்த்தியாகாததால் திருமணத்தை நடத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் காதலர்களால் வாழமுடியாத சூழ்நிலை ஏற்படும்போது ஒரே சுருக்கில் இருவரும் தூக்குப் போட்டு இறந்துபோகிறார்கள். தங்களது தற்கொலையை கேமராவில் பதிவு செய்துவிட்டு இறந்து போயிருக்கிறார்கள்.

அப்போது, அந்த கேமிராவில் இருவரும் பேசியிருப்பது தெரிய வருகிறது. அதில், நாங்கள் இருவரும் நிஜத்தில் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. நாங்கள் இறந்துபோன பிறகாவது எங்களுக்கு திருமணம் செய்துவைத்து, அந்த திருமணக் கோலத்திலேயே எங்களை புதைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அதன்படி, மைனர் சரவணன் மற்றும் நாயகனின் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இதற்கான ஏற்பாடுகளில் களமிறங்குகின்றனர். இதில் நண்பர்களுக்கும், மைனருக்கும் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. கடைசியில், இதற்கு அரசாங்கமும் இடையூறாக இருக்கிறது.

இறுதியில் இதையெல்லாம் மீறி காதலர்களுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

மீனாட்சியாக நடித்திருக்கும் அபினிதா, நல்ல துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். காதலில் வெற்றி பெறுவதற்காக தனது வீட்டாருடனும், மாமனார் வீட்டாருடனும் தைரியமாக எதிர்த்து பேசும் காட்சிகளில் அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.

இளங்கோவனாக வரும் சாரதி, படம் முழுவதும் அப்பாவி முகத்துடன் வலம் வந்து அனைவரையும் கவர்கிறார். இவரின் அப்பாவாக வரும் ‘காதல்’ தண்டபானி காதலுக்கு வில்லனாக கச்சிதமாக பொருந்துகிறார். இவர் பேசும் வசனங்கள் எதார்த்தமாக பதிந்திருக்கிறது.

மைனராக வரும் சரவணனுக்கு ‘பருத்திவீரனுக்கு’ பிறகு இப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரம். அதை அசால்ட்டாக செய்து கைதட்டல் பெறுகிறார். காமெடி, செண்டிமென்ட் என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார்.

ஆறாம் வகுப்பு படித்து போலி டாக்டராக வரும் சிங்கமுத்து காமெடியில் கலக்கியிருக்கிறார். படத்தின் முதல் காட்சியிலேயே நாயகனும், நாயகியையும் கொன்றுவிட்டு பிறகு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கதையை நகர்த்தி செல்லமுடியும் என்று நினைத்து, அதற்கேற்ற கதையை உருவாக்கி அதை திறம்பட இயக்கியிருக்கும் இயக்குனர் அரிராமனை பாராட்டலாம். மேலும், படத்தில் ஆபாச காட்சிகளே இல்லாமல் எதார்த்தமாக கொண்டு சென்றிருப்பது சிறப்பு.

அரவிந்த் ஸ்ரீராம் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் ஓகே ரகம்தான். முருகானந்தம் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அழகாக பதிவு செய்திருக்கிறது. பாடல் காட்சிகளில் பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘மீனாட்சி காதலன் இளங்கோவன்’ மென்மை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online