அரிதாரம் – திரை விமர்சனம்

Aridharam Movie 2016 New Year Wishes Posters

நாயகன் தமிழ், சிறு வயதிலேயே தாய்-தந்தையை விபத்தில் பறிகொடுத்துவிட்டு பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். ஒருகட்டத்தில் பாட்டியும் இறந்துபோகவே அனாதையாகிறார்.

பின்னர், அதேஊரில் பேப்பர் பொறுக்கும் சிறுவனிடம் நட்பு கொள்கிறார். இருவரும் சேர்ந்து ஒன்றாக பேப்பர் பொறுக்கி கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வரும் நிலையில், இவர்களிடம் காசு பறிக்கும் ரௌடியை அடித்து கொன்றுவிடுகிறார்கள்.

பிறகு அங்கிருந்து தப்பித்து ரெயில் ஏறி சென்னைக்கு வருகிறார்கள். சென்னையிலும் அதே பேப்பர் பொறுக்கும் வேலைதான்.

அப்போது, அதே ஏரியாவில் குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்தி வரும் நாயகி சோனியாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் தமிழ். இருவரும் காதலித்து வரும் நிலையில், அந்த ஏரியாவில் வசிக்கும் ஒரு பாட்டி இவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்.

அந்த பாட்டி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க எண்ணுகிறார். இந்நிலையில், பாட்டியின் சொத்துக்காக ஆசைப்படும், அவரது உறவினர் ஒருவர் பாட்டியிடம் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு, அவரை கொலை செய்வதற்காக தேடி அலைகிறார். அவர்களின் கண்ணில் மாட்டிக்கொள்ளாமல், பாட்டி இவர்களுடன் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இறுதியில், பாட்டி சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? காதலர்களுக்கு திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.

கதாநாயகன் தமிழ், பேப்பர் பொறுக்கும் பையன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகவே பொருந்தியிருக்கிறார். ஆனால், முதல் படம் என்பதால் இப்படத்தில் நடிக்க ரொம்பவுமே சிரமப்பட்டிருக்கிறார். இவருக்கு நண்பராக வருபவரும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார்.

நாயகி சோனியாவுக்கும் இது முதல் படம் என்பதால் இவரிடம் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருந்தாலும், ஓரளவுக்கு தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

மற்றபடி, படத்தில் வரும் பாட்டி நமது கவனத்தை ஈர்க்கிறார். மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பில் செயற்கைத்தனம் வெளிப்படுவதை காணமுடிகிறது.

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை படமாக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் அலெக்ஸாண்டர்.

ஆனால், கதாபாத்திரங்கள் தேர்வு, காட்சிகள் கோர்வை இல்லாதது, அழுத்தமில்லாத திரைக்கதை ஆகியவற்றால் ரசிக்க முடியவில்லை. மொஹமத் தாவூத் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான். மகிபாலன் ஒளிப்பதிவும் மெச்சும்படியாக இல்லை.

மொத்தத்தில் ‘அரிதாரம்’ அழகில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online