MENUMENU

மூன்றாம் உலகப் போர் – திரை விமர்சனம்

moondram-ulaga-por-first-look_141628539510இந்திய ராணுவத்தில் மேஜர் பொறுப்பில் இருக்கும் சுனில்குமார், விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருக்கும்போது, அவரது பெற்றோர்கள் நாயகி அகிலா கிஷோரை அவருக்கு திருமணம் செய்துவைக்கின்றனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவியை விட்டு பிரிந்து ராணுவத்துக்கு சென்றுவிடுகிறார் சுனில்குமார்.

அந்த நேரத்தில் சீன ராணுவத் தளபதியான வில்சன், இந்தியாவில் நாசவேலைகளை ஏற்படுத்தி அமைதியை குலைப்பதற்காக தனது மகனுடன் 100 வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார். அவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணிப்பதற்காக ஒவ்வொருவர் உடம்பிலும் கம்யூட்டர் சிப் வைத்து அனுப்புகின்றனர்.

ஆனால், இந்தியாவுக்குள் நுழைந்த 100 வீரர்களும் திடீரென தொடர்புகொள்ள முடியாமல் காணாமல் போகிறார்கள். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது சீனா தளபதிகளுக்கு மர்மமாகவே இருக்கிறது.

இந்நிலையில், இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பில் இருக்கும் மேஜர் சுனில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு இதுபற்றி தெரிந்திருக்கக்கூடம் என்று நினைத்து அவர்களை சீன ராணுவத்தினர் கடத்தி கொண்டுபோய் சிறை வைக்கின்றனர்.

அப்போது சுனில்குமாரை மட்டும் தங்களது கஸ்டடியில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை கொன்றுவிடுகிறார்கள். சுனில்குமாரிடம் 100 வீரர்கள் பற்றிய விவரங்களை கேட்டு அவரை பலவிதமாக டார்ச்சர் செய்து விசாரிக்கிறார்கள்.

இறுதியில், அந்த 100 வீரர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் சுனில் குமாருக்கு தெரிந்ததா? அந்த 100 வீரர்கள் என்ன ஆனார்கள்? சீன ராணுவத்தினரிடம் இருந்து சுனில்குமார் எப்படி தப்பித்தார்? என்பதே மீதிக்கதை.

நாயகன் சுனில்குமார் இந்திய ராணுவ மேஜருக்குண்டான மிடுக்குடனும், தைரியத்துடனும் அழகாக நடித்திருக்கிறார்.

படத்தில் இவருக்கு ஜோடி இருந்தாலும், அவருடனான காதல் காட்சிகள் மிகவும் குறைவு. போர் சம்பந்தப்பட்ட படம் என்பதால், பெரும்பாலும் துப்பாக்கி கையுமாகவே அலைந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் ரொம்பவும் தெளிவு இல்லாமலே நடித்திருக்கிறார்.

அகிலா கிஷோர் சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். சீனா தளபதியாக வரும் வில்சன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

படத்தில் இவர் பேசும் வசனங்கள் இந்தியனாக நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கிறது. இவருக்கும் ஹீரோவுக்கும் உண்டான காட்சிகளே படத்தில் பிரதானமாக இருப்பதால் மற்ற கதாபாத்திரங்கள் யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

2025-ல் இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையே உலகப்போர் நடப்பதாக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை படமாக்கியிருக்கிறார்.

ஆனால், 2025-ம் ஆண்டின் வளர்ந்த தொழில்நுட்பம் எதுவும் நம் கண்ணுக்கு தெரியவில்லை. மேலும், கிராபிக்ஸில் வரும் போர் காட்சிகள் எல்லாம் வீடியோ கேமை பார்ப்பதுபோன்ற உணர்வை கொடுத்திருக்கிறது.

படத்திற்கு பெரிய பலம் வசனங்கள்தான். நாயகனாகட்டும், வில்லனாகட்டும் இருவரும் பேசும் வசனங்கள் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

வேத் சங்கரின் இசை காதுகளுக்கு இரைச்சலாக விழுந்திருக்கிறது. பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். தேவாவின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.

மொத்தத்தில் ‘மூன்றாம் உலகப் போர்’ வெறும் கற்பனைதான்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online