மனைவியைப்போல் சினிமாவையும் உண்மையாக காதலிக்கிறேன்: எஸ்.ஏ.சந்திரசேகரன்

S.A.Chandrasekarநடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் 69 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். அவருக்கு 73 வயது ஆகிறது. தனது 73-வது வயதில் எஸ்.ஏ.சந்திரசேகரன், 19 வயது இளைஞர் ஒருவரின் டைரக்ஷனில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

அந்த படத்தின் பெயர், ‘நையப்புடை.’ டைரக்டரின் பெயர், விஜய்கிரண். இந்த படத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு தயாரித்து இருக்கிறார். படத்தின் ‘டீசர்’ வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.

ஷோபா சந்திரசேகரன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில், எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

‘‘எனக்கு உழைப்பு தவிர வேறு எதுவும் தெரியாது. யாரையாவது உண்மையாக நாம் விரும்பினால், அவர்கள் நம்மை விட மாட்டார்கள். நான் 5 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டவன். இந்தி படப்பிடிப்புகளுக்காக மும்பை போகும்போது, நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பேன்.

ஓட்டல் சாப்பாடு எனக்கு பிடிக்காது. அதனால் மனைவியை உடன் அழைத்துச் செல்வேன். நட்சத்திர ஓட்டல்களில் நாம் சமைக்க அனுமதிப்பதில்லை. எனவே குளியல் அறையில் உள்ள ‘பிளக் பாயிண்ட்’டில் குக்கரை வைத்து என் மனைவி சமைத்துக் கொடுப்பார்.

யாரையாவது நாம் விரும்பினால், அவர்கள் நம்மை விட மாட்டார்கள். உண்மையாக காதலித்தால், விட மாட்டார்கள். ஆனால், இப்போது யாரும் உண்மையாக காதலிப்பது இல்லை.

மனைவியைப் போலவே நான் சினிமாவையும் நிஜமாக காதலிக்கிறேன். காதலுக்கு தனி சக்தி உண்டு. காதலித்தால் ஒரு சக்தி வரும். அதனால்தான் இனி சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்தாலும், படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன. எனக்கு உழைக்க மட்டுமே தெரியும்.

என் தயாரிப்பாளர்கள் சொல்வார்கள் மாடு மாதிரி உழைக்கிறானே என்று. நான் பெரிய அறிவாளி இல்லை. எனக்கு இரண்டு வரியில் கூட கவிதை எழுத தெரியாது. நான்கு வரிகளில் வசனம் எழுத தெரியாது. இலக்கியம் படித்ததில்லை.

இருந்தாலும் உழைப்பேன். இப்போது, சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள். கதையில்லாமல் படம் எடுக்கிறார்கள். அதுவும் ஓடுகிறது. எனக்கு 73 வயது ஆகிறது. ‘நையப்புடை’ டைரக்டர் விஜய்கிரணுக்கு 19 வயது.

இந்த பையன் டைரக்டு செய்வதைப் பார்த்து திருப்தியில்லாமல், இரண்டாவது நாளில் ஓடி விடலாம் என்று நினைத்தேன். படத்தை நிறுத்தி விடலாம் என்று தயாரிப்பாளர் தாணுவிடம் சொன்னேன். அவர்தான் என்னை சமாதானப்படுத்தினார். நான்காவது நாளில் படம் எடுத்தவரை ‘எடிட்’ செய்து திரையிட்டு காட்டினார்கள். அசந்து போனேன்.

அடுத்த நாள் டைரக்டரிடம், ‘‘நீ உட்கார சொன்னால் உட்காருகிறேன். எழுந்து நிற்க சொன்னால் நிற்கிறேன்’’ என்றேன். இன்றைய இளைஞர்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. துரை செந்தில்குமார் டைரக்ஷனில் தனுசுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். தனுஷ் நடிப்பது தெரியாமல் நடிக்கிறார். அவரிடம் நிறைய கற்றுக் கொள்கிறேன்.’’

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

விழாவில் நடிகர் ஆர்யா, பாடல் ஆசிரியரும் நடிகருமான பா.விஜய், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, பி.டி.செல்வகுமார், காஸ்மோ சிவா, டைரக்டர்கள் ஏ.வெங்கடேஷ், பொன்ராம், விஜய்கிரண், இசையமைப்பாளர் தாஜ்நூர், ஒளிப்பதிவாளர் ஜீவன் ஆகியோரும் பேசினார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries