பாலா இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடித்த வரலட்சுமியின் நடிப்பை பார்த்து பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியும் ‘தாரை தப்பட்டை’ படத்தை பார்த்து வரலட்சுமியின் நடிப்பை பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் ‘தாரை தப்பட்டை’ படத்தை பார்த்த ரஜினி, அதில் வரலட்சுமியின் நடிப்பையும், நடனத்தையும் பார்த்து வியந்து போயுள்ளார். உடனே, வரலட்சுமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது நடிப்பை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து, வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, நான் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறேன். ரஜினி சார் எனக்கு போன் செய்து என்னுடைய நடிப்பை பாராட்டினார். இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
வரலட்சுமி ‘தாரை தப்பட்டை’ படத்தில் கரகாட்டகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் இவருடைய நடிப்பு ரொம்பவும் எதார்த்தமாக பதிவாகியிருந்தது.
மேலும், நடனத்திலும் வெறி பிடித்தவர்போல் ஒரு கரகாட்டக்காரிக்குண்டான பாவணையுடன் அழகாக நடனமாடியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு அவருக்கு நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய இடம் கிடைக்கும் என நம்பலாம்.