MENUMENU

இறுதிச்சுற்று – திரை விமர்சனம்

Iruthi-Sutru-341x400ஹரியானாவில் பாக்சராக இருக்கும் மாதவன், ஒரு போட்டியில் தோல்வியடையவே அவர் தகுதி இழந்துவிட்டார் என்று போட்டியில் கலந்துகொள்ள பாக்சிங் அசோசியேஷன் அவரை புறக்கணிக்கிறது.

இதனால் அவரது மனைவியும் இவரை விட்டு பிரிந்து செல்கிறார். இதனால், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார் மாதவன்.

இருந்தாலும் பாக்சிங்கையே தன்னுடைய உயிருக்கும் மேலாக கருதி வரும் மாதவன், அங்கேயே பாக்சிங் கோச்சாக பணியாற்றி வருகிறார். இந்திய அளவில் சிறந்த கோச்சாக செயல்பட்டு வரும் மாதவனுக்கும் பாக்சிங் அசோசியேஷனைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் பிரச்சினை வருகிறது. இதனால் அவரை சென்னைக்கு மாற்றுகிறார்கள்.

சென்னையில் ஒரு பாக்சிங் சாம்பியனை உருவாக்கிக் காட்டுகிறேன் என்ற சவாலுடன் சென்னைக்கு வருகிறார். சென்னையில் காசி மேடு குப்பத்தில் மீன் விற்கும் பெண்ணாக இருக்கிறார் ரித்திகா சிங். இவருடைய அக்கா மும்தாஜ் சொர்கார்.

மும்தாஜ் பாக்சிங்கில் வெற்றி பெற்றால் போலீஸ் வேலை கிடைக்கும். அதனால் பாக்சிங் கற்றுக்கொண்டு வெற்றி பெறவேண்டும் என்பதாலேயே பாக்சிங்கில் ஈடுபட்டு வருகிறாள்.

ஆனால், ரித்திகாவுக்கு பாக்சிங் மீது சுத்தமாக ஈடுபாடு கிடையாது. இந்நிலையில், தன்னுடைய அக்கா பங்கேற்ற ஒரு போட்டியில் தவறாக செயல்பட்ட நடுவரை, போட்டு உதைக்கும் ரித்திகா சிங்கை பார்க்கும் மாதவன், அவள் அடிக்கும்போது அவளிடம் இருக்கும் பாக்சிங் ஸ்டைலை கண்டு வியக்கிறார். அவளுக்கு எப்படியாவது பாக்சிங் கோச்சிங் கொடுத்து தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள பார்க்கிறார்.

ரித்திகாவிடம் சென்று அவளை பாக்சிங் கற்றுக்கொள்ள அழைக்கிறார் மாதவன். ஆரம்பத்தில் பணத்துக்கு ஆசைப்பட்டு பாக்சிங் கற்றுக்கொள்ள வரும் ரித்திகா, ஒருகட்டத்தில் மாதவன் பாக்சிங் மீது கொண்டுள்ள வெறியைக் கண்டு கடினமாக உழைக்கிறார்.

இது ரித்திகாவின் அக்காவுக்கு பிடிக்காமல் போக, சில சூழ்ச்சி வேலைகள் செய்து ரித்திகாவை போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் செய்கிறார் அவரது அக்கா. இதனால் ரித்திகா மீது கோபமடையும் மாதவன் அவளை துரத்தி விடுகிறார்.

இறுதியில் ரித்திகா மீண்டும் மாதவனிடம் வந்து சேர்ந்தாரா? மாதவனின் லட்சியம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மாதவன், தனக்கே உரித்தான தனி ஸ்டைலில் நடித்து அசத்தியிருக்கிறார். இவர் படத்தில் பேசும் வசனங்கள் எல்லாம் அரசியல்வாதிகளுக்கும், இந்தியன் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனுக்கும் சவுக்கடியாக இருக்கிறது. ஒருசில வசனங்கள் பேசும்போது மாதவனின் துடிப்பும், நடிப்பும் நம்மை உறைய வைக்கிறது.

நிஜத்தில் பாக்சரான ரித்திகா சிங்கிற்கு இந்த படத்தில் பொருத்தமான கதாபாத்திரம்தான். இருந்தாலும், பாக்சிங் மட்டுமல்லாமல் மற்ற காட்சிகளிலும் தான் ஒரு புதுமுக நடிகை என்பதை எங்கும் தெரியாத மாதிரியான அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மீன் காரியாகவும், அக்காவுக்காக சண்டை போட்டுவிட்டு சுட்டிப் பெண்ணாக இவர் ஆடும் ஆட்டம், நடை, ஸ்டைல் என அனைத்துமே மிகவும் கவரும் விதமாக இருக்கிறது.

ரித்திகாவின் அக்காவாக வரும் மும்தாஜ் சொர்கார், ஜாகிர் உசேன், ராதாரவி, நாசர், காளி வெங்கட் என படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களையும் எங்கேயும் விட்டுவிடாமல் கடைசி வரை கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்கது.

பெண் இயக்குனரான சுதா கொங்கராவுக்கு தமிழில் இரண்டாவது படம். தனது இரண்டாவது படத்திலேயே இவ்வளவு பெரிய கதையை தைரியமாக எடுத்து, அதை பக்குவமாக கையாண்டிருக்கிறார்.

இதற்காக அவரை பாராட்டலாம். அழகான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள் படத்தை தூக்கி நிறுத்துகிறது. தமிழில் பெண் இயக்குனர்களில் இவரது பெயர் நிலைத்து நிற்கும் என்று சொல்லலாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்துள்ள பாடல்கள் படத்தின் திரைக்கதையை பாதிக்காத வண்ணம் அமைந்திருப்பது சிறப்பு. பின்னணி இசையில் பட்டையை கிளப்பியிருக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும் அருமையாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘இறுதிச்சுற்று’ வெற்றிச்சுற்று

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online