MENUMENU

வில் அம்பு – திரை விமர்சனம்

vil-ambuநடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர் ஹரிஸ் கல்யாண். இவர் அப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாதவர். அப்பாவுக்காக தனது ஆசைகளையெல்லாம் துறந்து வாழ்ந்து வருகிறார்.

இவரும் சிருஷ்டி டாங்கேயும் காதலித்து வருகிறார்கள். அதே பகுதியில் சேரியில் வசிக்கும் சாந்தினி இவரை ஒருதலையாக காதலித்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க, அதே சேரிப்பகுதியில் குடிகார தந்தையின் மகனான ஸ்ரீ சிறுசிறு திருட்டு வேலைகளை செய்து வருகிறார். இவருடைய துணிச்சலை பார்த்து, இவர்மீது காதல்வயப்படுகிறார் பள்ளி மாணவியான சம்ஸ்க்ருதி.

ஸ்ரீயும் சம்ஸ்க்ருதியும் காதலிக்க தொடங்கவே, திருடனாக இருந்த அவர் காதலுக்காக நேர்மையாக உழைத்து முன்னேற முடிவெடுக்கிறார்.

மறுமுனையில், நல்லவரான ஹரிஸ், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஜெயிலுக்கு போகவேண்டிய சூழ்நிலை ஆகிறது. அவர்மீது திருட்டு பழி விழுகிறது.

அந்த பழியை துடைக்க போராடுகிறார் ஹரிஸ். இவ்வாறாக இவர்களுக்குள் இருக்கும் தொடர்பும், அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களுமே படத்தின் முழுக்கதை.

படத்தில் இரண்டு கதாநாயகர்கள். ஹரிஸ் கல்யாண் தந்தை சொல் தட்டாத மகனாகவும், அதேசமயம் தனது ஆசைகளை வெளிக்காட்டாமல் தனக்குள் அடக்கி வைத்து அவதிப்படும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இவர் கதாபாத்திரம் பார்ப்பவர்களை பரிதாபப்படும்படியானது. அதை இவர் சிறப்பாக செய்திருக்கிறார். எந்த கெட்டப்பில் வந்தாலும் பார்க்க அழகாக இருக்கிறார்.

ஸ்ரீ, எதற்கும் பயப்படாத கதாபாத்திரம். துணிச்சலான பேச்சால் தனக்கு கொடுத்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

குறிப்பாக, நாயகி வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட அவர், அந்த நேரத்தில் அவர் எடுக்கும் முடிவு, நாயகியின் தந்தையிடம் இவர் பேசும் வசனங்கள் என அனைத்தும் சிறப்பு. இந்த படம் இவருக்கு மேலும் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.

ஸ்ரீயின் துணிச்சலை பார்த்தே அவரை காதலிக்கும் சம்ஸ்க்ருதியின் துணிச்சலுக்கும் குறைவு இல்லை. இவர் செய்யும் முகபாவனைகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நன்கு நடித்திருக்கிறார். இவருடைய வசனங்களும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

சிருஷ்டி டாங்கே, ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளே வந்தாலும் ரசிக்கும்படி செய்திருக்கிறார். அதேபோல், சாந்தினி படத்தின் துவக்கத்தில் இருந்து இருந்தாலும், முதல்பாதியில் இவரது கதாபாத்திரத்திற்கு வலுவில்லை.

இறுதிக் காட்சியில் தனது கதாபாத்திரத்திற்கு வலுவூட்டி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறார். யோகிபாபுவின் பஞ்ச் வசனங்கள் கலகலப்பூட்டுகின்றன. ஹரிஷ் உத்தமன் சில காட்சிகளே வந்தாலும் தனது கதாபாத்திரத்தில் ஜொலித்திருக்கிறார்.

இரண்டு ஹீரோக்களை வைத்து ஒரே ரூட்டில் பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. அதை இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் அருமையாக கையாண்டிருக்கிறார்.

அதேபோல், இருவரும் எப்போது சந்திப்பார்கள்? என்ற ஏக்கத்தையும் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். திரைக்கதையை விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் டுவிட்ஸ்ட் வைத்து முடித்திருப்பது சிறப்பு.

மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. ஒரு சிறிய தெருவுக்குள் நடக்கும் சண்டை காட்சிகளை எல்லாம் இவரது கேமரா அழகாக படமாக்கியிருக்கிறது. நவீன் இசையில் 3 பாடல்கள்தான் என்றாலும், அனைத்தும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘வில் அம்பு’ பாயும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online