MENUMENU

நவரச திலகம் – திரை விமர்சனம்

navarasa-thilagam-movie-poster_144065372900மா.கா.பா.ஆனந்தின் அப்பா இளவரசு திருச்சியில் பார் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். எந்த வேலை வெட்டிக்கும் செல்லாத மா.கா.பா. சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதற்காக தனது அப்பாவின் சொத்துக்களை பாதி அழித்துவிடுகிறார். பார் இருக்கும் இடம் மட்டுமே இவர்களுக்கு மிச்சமாக இருக்கிறது.

இந்நிலையில், ஒருநாள் ரெயிலில் நாயகி சிருஷ்டி டாங்கேவை பார்க்கும் மா.காபா. அவளை பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார். அவளை நோட்டமிடுவதை பார்க்கும் சிருஷ்டியின் அப்பாவான ஜெயப்பிரகாஷ், மா.கா.பாவை துரத்துவதற்காக அவளுக்கு வாய் பேசமுடியாது என்று மா.கா.பா.விடம் சொல்கிறார்.

ஆனால், அது, சிருஷ்டி மீதான மா.கா.பா.வின் காதலை அதிகமாக்குகிறது. அவளை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவள் பின்னாலேயே சுற்றுகிறார் மா.கா.பா. ஒருகட்டத்தில் சிருஷ்டிக்கு நன்றாக வாய் பேசத் தெரியும் என்று மா.கா.பா.விற்கு தெரிய வருகிறது. பின்னர், சிருஷ்டியும் மா.கா.பா.மீது காதல் வயப்படுகிறாள்.

இவர்களது காதல் வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் வேளையில் அவளது குடும்பத்தோடு நெருங்க மா.கா.பா. திட்டம் போடுகிறார். அப்போது, சிருஷ்டியின் அக்காவுக்கு அரசு வேலையில் இருக்கும் சித்தார்த் விபினை திருமணம் செய்ய பேசி முடிக்கிறார்கள்.

இது மா.கா.பாவிற்கு தெரிய வந்ததும், விபினுடன் நெருக்கமாகி, அவள் குடும்பத்தோடு நெருங்க பார்க்கிறார். இதற்காக விபினுடன் நெருங்கி பழகி நண்பராகிறார். நிச்சயதார்த்த தேதி நெருங்கும் வேளையில், சித்தார்த் விபின் தனது அத்தை மகன் என்பது மா.கா.பா.விற்கு தெரிய வருகிறது.

விபின், சிருஷ்டியின் அக்காவை திருமணம் செய்துகொண்டால், சிருஷ்டி தனக்கு தங்கை உறவு வரும் என்பதால், இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தவேண்டும் என மா.கா.பா. முடிவெடுக்கிறார்.

இறுதியில், இந்த திருமணத்தை நிறுத்தி தனது காதலியை மா.கா.பா. கைபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நகைச்சுவை ஹீரோவாக நடித்திருக்கும் மா.கா.பா. ஆனந்த் தனது நடிப்பில் முழுமையாக பளிச்சிடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல், ரொமான்ஸ் காட்சிகளிலும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.

நாயகனுக்கு நண்பனாக வரும் கருணாகரனுக்கம் இந்த படத்தில் சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. அவருடைய முந்தைய படங்களைவிட இந்த படத்தில் இவரது நடிப்பு சற்று குறைவுதான். சிருஷ்டி டாங்கே கிராமத்து பெண்ணாக அழகாக பளிச்சிடுகிறார். சிரிப்புக்கு பெயர்போன இவருடைய முகத்தில் கொஞ்சம் நடிப்பையும் வரவழைக்க முயற்சி செய்ய வேண்டும்.

படத்திற்கு மிகப்பெரிய பலமே சித்தார்த் விபின்தான். இவர் வரும் காட்சிகள் எல்லாம் காமெடிக்கு முழு கியாரண்டி. இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு இவரது உருவம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

குறிப்பாக, மா.கா.பா.விடம் சிருஷ்டியின் அக்கா நம்பரை இவர் கேட்க, அதற்கு மா.கா.பா., விபினின் நம்பரையே அவருக்கு கொடுக்க, அது தெரியாமல், விபின் அந்த நம்பரை பதிவு செய்துவிட்டு, அவருக்கே போன் போட்டு டென்சன் அடையும் காட்சிகள் எல்லாம் அல்டிமேட் காமெடி.

ஜெயப்பிரகாஷ் தோற்றத்திலும், உடையிலும் மிகவும் அழகாக தெரிகிறார். இளவரசு பொறுப்பான அப்பாவாக பளிச்சிடுகிறார்.

இயக்குனர் கம்ரான் ஒரு முழு நீள நகைச்சுவை படமாக எடுத்திருக்கிறார். முதல் பாதி கொஞ்சம் போரடித்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் செல்கிறது. படம் கொஞ்சம் நீளமாக இருப்பதுபோன்ற உணர்வை தருவது படத்திற்கு சற்று பின்னடைவு.

சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையும் ஓகேதான். ரமேஷ் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘நவரச திலகம்’ கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online