நடிகர் சஞ்சய் தத்தை கவிஞராக மாற்றிய சிறை வாழ்க்கை

sanjaydutt-4801993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி 257 பேரை கொன்று குவித்து, நாட்டையே அதிர வைத்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், நடிகர் சஞ்சய் தத் சிக்கியது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று.

இந்த கொடூர தாக்குதல்களின்போது, தனது வீட்டில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக மும்பை தடா கோர்ட்டு, சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு அந்த தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது.

சஞ்சய் தத் புனே எரவாடா சிறையில் தனது தண்டனையை அனுபவித்து வந்தார். கடந்த மாதம் 25-ந்தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த நடிகர் சஞ்சய் தத், சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவருக்கு மூங்கில் பொருட்கள் செய்தல், காகித பை செய்தல் போன்ற வேலைகள் ஒதுக்கப்பட்டன. அதை அவர் நேர்த்தியாக செய்தார்.

சிறை வாழ்க்கை சஞ்சய் தத்தை ஒரு கவிஞராக மாற்றியது. சிறைப் பணிகளுக்கு இடையே ஓய்வு நேரத்தில் அவர் 500-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இந்த கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட சஞ்சய் தத் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சஞ்சய் தத் கூறியதாவது:-

நான் சில கவிதைகளை எழுதியுள்ளேன். ‘சலாக்கேஹன்’ என்ற பெயரில் அதை புத்தகமாக வெளியிடவும் முடிவு செய்துள்ளேன். நான் 500-க்கும் அதிகமான கவிதைகளையும், 100 ஈரடி கவிதைகளையும் எழுதியுள்ளேன்.

இவை அனைத்தும் இந்தியில் எழுதப்பட்டவை. குறிப்பிட்ட சமயத்தில் என்னை ஆச்சரியப்படுத்திய சில விஷயங்களையே நான் கவிதையாக இந்த புத்தகத்தில் எழுதியுள்ளேன்.

எனக்கு நினைவிருக்கிறது, சிறையில் இருந்த என்னை அன்று என் மனைவி சந்தித்தார். அன்று அவருக்கு காய்ச்சல் இருந்தும், அதை பொருட்படுத்தாமல் என்னை வந்து பார்த்தார். அவரை பார்த்ததில் இருந்து என் மனம் மிகவும் வேதனைக்குள்ளானது.

“ உன் கண்களில் ஆனந்த கண்ணீர் இருந்தது

உதட்டினில் சிரிப்பும், கண்களில் அன்பும் தெரிந்தது

உன்னை பார்க்க எனக்கு கவலையாக இருந்தது

ஆனாலும் மனது மகிழ்ச்சியில் திளைத்தது

தொடர்ந்து என்மீது அளவில்லா அன்பை செலுத்துகிறாய் அன்பே”

என்று அந்த நிகழ்வை கவிதையாக எழுதினேன்.

நான் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட விரும்புகிறேன். இருப்பினும் தற்போது நான் என் குடும்பத்தினரிடம் திரும்பியுள்ளேன். சிறிது காலம் அவர்களுடன் செலவிட உள்ளேன்.

இவ்வாறு நடிகர் சஞ்சய் தத் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries