சமீப காலமாக போலீஸ் கதையம்சம் கொண்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. சமீபத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்த ‘சேதுபதி’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுபோல் அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ‘ஆறாது சினம்’ படத்திற்கும் நல்ல வசூல்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெறி’ படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படமும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வரிசையில் தற்போது ஜெய்யும் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இதுவரை காதல், ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த ஜெய் இப்படம் மூலம் முதல் முறையாக போலீஸ் வேடம் ஏற்க இருக்கிறார்.
இந்த படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக சி.வி.குமார் தயாரிக்க இருக்கிறார். அறிமுக இயக்குனர் இப்படத்தை இயக்க இருக்கிறார்.
ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புகழ்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.