MENUMENU

ஆகம் – திரை விமர்சனம்

Aagam-Movie-Posters-2நாயகன் இர்பான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டே, படித்த இளைஞர்கள் வெளிநாட்டு மோகத்தை கைவிட்டுவிட்டு இந்தியாவிலேயே பணிபுரிய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.

அதேபோல், ஜெயப்பிரகாஷும் இந்தியா வல்லரசாவதற்கு அரசாங்கம் என்னமாதிரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதற்கு ஒரு திட்டத்தை ஆராய்ச்சி செய்து வைத்திருக்கிறார். இதற்கு உறுதுணையாக இர்பானும் இருந்து வருகிறார்.

ஜெயப்பிரகாஷின் ஆராய்ச்சியை கைப்பற்றி அதன்மூலம் காசு சம்பாதிக்க அரசியல்வாதியான ஒய்.ஜி.மகேந்திரன் முயற்சி செய்து வருகிறார். இவரது மகனான ரியாஸ்கான் வெளிநாட்டுக்கு இளைஞர்களை அனுப்பி அதன்மூலம் நிறைய பணம் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில், வெளிநாட்டு மோகத்தை இளைஞர்கள் கைவிடவேண்டும் என்ற குறிக்கோளுடனே வாழ்ந்து வரும் இர்பானுடைய அண்ணனுக்கு வெளிநாட்டில் சென்று வேலைபார்க்க ஆசை. ஆகையால் தம்பிக்கு தெரியாமலேயே ரியாஸ்கானிடம் சென்று பணம் கொடுத்து வெளிநாடு செல்கிறான். ஆனால், ரியாஸ்கான் அங்கு அவனை வேறுவிதமான பிரச்சினையில் சிக்க வைத்துவிடுகிறார்.

இறுதியில், இர்பான் தனது அண்ணனை அங்கிருந்து மீட்டுக் கொண்டு வந்தாரா? ஜெயப்பிரகாஷ் செய்த ஆராய்ச்சிக்கு என்ன பலன் கிடைத்தது? என்பதே மீதிக்கதை.

இர்பான் இந்தியா மீது மிகுந்த பற்றுள்ள துடிப்பான இளைஞராக வலம் வந்திருக்கிறார் இர்பான். ஆக்ஷன், ரொமான்ஸ் என சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி தீக்ஷிதாவுக்கு வலுவான கதாபாத்திரம் இல்லை. இருப்பினும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

வில்லனாக வரும் ரியாஸ்கான், தொழிலதிபருக்கான மிடுக்குடன் கச்சிதமாக வலம் வந்திருக்கிறார். ஜெயப்பிரகாஷுக்கு இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம். இவருடைய முந்தை படங்களில் இவர் பேசும் வசனங்கள் மிகவும் எதார்த்தமாகவும், ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்கும்.

ஆனால், இயக்குனர் இவரிடம் சரியாக வேலை வாங்காதததும், இவருக்குண்டான வசனங்களை வலுவில்லாமல் கொடுத்ததும் ரசிக்கும்படி இல்லாமல் செய்துவிட்டது.

இப்படத்தின் இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் நிஜத்தில் ஒரு டாக்டர். இப்படத்திற்கு எண்ணம், ஆராய்ச்சி, இயக்கம் என செய்து இதில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

முதல் பாதியிலேயே இவருடைய கதை ஆட்டம் கண்டுவிடுகிறது. ஒவ்வொரு காட்சிகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் இருக்கிறது. சரி, இரண்டாம் பாதியாவது ரசிக்க முடியுமா என்று பார்த்தால், முதல் பாதிக்கு சற்றும் தொடர்பு இல்லாமல் இரண்டாம் பாதி தொடங்குகிறது. ஒரு விவரமும் தெரியாத ஒரு இயக்குனர் இயக்கியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

இப்படத்திற்காக ஆராய்ச்சியெல்லாம் செய்ததாக இறுதியில் அதை தனியாக போட்டுக் காண்பித்திருக்கிறார். அவை அனைத்து நல்ல விஷயங்களாக இருந்தாலும், இவர் இயக்கிய விதத்தால் அனைத்து விஷயங்களும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.

இந்தியாவின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் வெளிநாடு செல்ல நினைக்கக்கூடாது என்ற ஆழமான கருத்தை சொல்ல நினைத்த இயக்குனர், அதை ஒரு ரசிகன் 2 மணி நேரம் தியேட்டரில் அமர்ந்து பார்க்கும் வகையில் படமாக்காதது வருத்தமே.

அவரவர் தனக்கான வேலையை சரியாக செய்தால், அந்த வேலை சிறப்பாக அமையும். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து கொள்வதால் என்னென்ன விபரீதங்கள் நடக்கும் என்பதற்கு இப்படத்தின் இயக்குனர் ஒரு எடுத்துக்காட்டு.

மற்றபடி விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் சற்று ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையும் ஓகே ரகம்தான். ஆர்.வி.சரண் ஒளிப்பதிவும் நன்றாகவே இருக்கிறது.

மொத்தத்தில் ‘ஆகம்’ பார்ப்பவர்கள் பாவம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online