MENUMENU

ஹலோ நான் பேய் பேசுறேன் – திரை விமர்சனம்

hello-naan-pei-pesurenசென்னையில் தனிமையில் வசித்து வரும் நாயகன் வைபவ் திருட்டுத் தொழில் செய்கிறார். இந்நிலையில், அனாதை குழந்தைகளுக்கு நிதி திரட்ட ஒவ்வொருவருக்கும் போன் போட்டு நிதி கேட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஒருநாள் வைபவ் நம்பருக்கு போன் செய்து நிதி கேட்கிறாள். அப்போது, வைபவ் தனக்கு வேலை இல்லை என்றும், மிகவும் கஷ்டப்படுவதாகவும் அவளிடம் கூறுகிறார்.

இதை நம்பிய ஐஸ்வர்யா ராஜேஷ், அவர்மீது இரக்கப்பட்டு, தன்னுடைய அலுவலகத்திலேயே ஒரு வேலை வாங்கிக் கொடுக்கிறார். அவர்கள் தயார் செய்யும் பொருட்களை வீடு, வீடாக சென்று விற்பனை செய்வதே வைபவ்வின் வேலை.

வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே கம்பெனி கொடுத்த அனைத்துப் பொருட்களையும் விற்றுவிட்டு, அந்த காசை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டுகிறார்.

இதனால், வைபவ்வுக்கு சிபாரிசு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ் மீது பழி விழுகிறது. அவர் வைபவ் எடுத்துச்சென்ற பணத்தை கம்பெனியில் கட்டுவதற்காக தனது தங்கச் செயினை அடமானம் வைக்க செல்கிறார். அப்போது, அங்கு வைபவ்வை பார்த்ததும் அவர்மீது கோபம் கொள்கிறார்.

பின்னர் வைபவ் தன்னுடைய உண்மை நிலையை சொல்லி, அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவர் கையாடல் செய்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கிறார். இந்த சந்திப்புப்புக்குப் பிறகு அவர்களுக்கிடையே உள்ள இடைவெளி குறைந்து, இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர்.

இந்நிலையில், ஒருநாள் வைபவ் ரோட்டில் நடந்துகொண்டிருக்கும்போது, ஓவியா சாலையில் அடிபட்டு இறந்து போகிறாள். அவளது செல்போன் சாலையில் அனாதையாக கிடக்கவே, அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிடுகிறார் வைபவ்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது அந்த போனில் அழைப்பு வருகிறது. அதை எடுத்து பேசும் வைபவ் பேயிடம் மாட்டிக் கொள்கிறார். இறுதியில், செல்போன் மூலம் வந்த பேயிடம் இருந்து தப்பித்தாரா? அந்த பேய் மூலம் அவருக்கு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வைபவ் குறும்புத்தனமான சேட்டைகளால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர் பேயைப் பார்த்து பயப்படும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. முந்தைய படங்களை விட இப்படத்தில் மிகவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

நாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஓவியா நடித்திருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வழக்கமான கதாபாத்திரம் என்றாலும் அதை திறம்பட செய்திருக்கிறார். குறிப்பாக நடன காட்சியில் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஓவியா பாதி நேரம் பேயாக வந்து பயமுறுத்தியிருக்கிறார்.

படத்திற்கு பெரிய பலமாக வி.டி.வி.கணேஷ், சிங்கப்பூர் தீபன், யோகி பாபு ஆகியோரின் நடிப்பு அமைந்திருக்கிறது. இவர்கள் செய்யும் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. யோகி பாபுவுக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

பேய் படங்கள் ரசிகர்களை ஆதிக்கம் செய்கிறது என்பதை அறிந்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாஸ்கர். படத்தில் பேயை விட காமெடியே அதிகம் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்தில் பேய் வருமா என்று எதிர்பார்த்து பயந்து இருந்தால், காமெடி வந்து சிரிப்பூட்டுகிறது. காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற சுந்தர்.சி இப்படத்தை தயாரித்திருப்பதால், அவர் பாணியிலேயே படத்தை இயக்கியிருக்கிறார் பாஸ்கர்.

சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இவர் இசையில் உருவான குத்துப் பாடல் தாளம் போட வைத்திருக்கிறது. பின்னணி இசையையும் கலக்கியிருக்கிறார். பானு முருகனின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான அளவிற்கு உதவி இருக்கிறது.

மொத்தத்தில் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ பயப்படாமல் பார்க்கலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online