MENUMENU

ஓய் – திரை விமர்சனம்

oye-1219ஜெயிலில் கைதியாக இருக்கும் நாயகி ஈஷா, தனது அக்காவின் திருமணத்திற்காக பரோலில் வெளியே வருகிறார்.

பஸ்சில் ஊருக்கு செல்லும்போது நாயகன் கீதனும் அதே பஸ்சில் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பயணம் செய்கிறார். பஸ் ஒரு நிறுத்தத்தில் நிற்கும்போது, கீழே இறங்கும் கீதனின் செயினை அவனுக்குத் தெரியாமலேயே திருடன் ஒருவன் திருடிச் செல்கிறான்.

இதை அறிந்த நாயகி ஈஷா, பஸ்சிலிருந்து இறங்கி அந்த திருடனைத் துரத்திப் பிடித்து செயினோடு திரும்பி வருகிறார். அப்போது, அவர் செல்லவேண்டிய பஸ் சென்று விடுகிறது.

அதில், அவர் கொண்டு வந்த உடமைகளும் சென்றுவிடுகிறது. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் அவருக்கு, கீதன் தான் ஒரு கிராமத்தில் பெரிய பண்ணையாரின் மகன் என்று பஸ்சில் மற்றொருவருடன் பேசியது நினைவுக்கு வருகிறது.

தனது பையை கீதன் எடுத்து சென்றிருக்கலாம் என்று நினைத்த ஈஷா, கீதன் சொன்ன கிராமத்திற்குச் சென்று செயினை கொடுத்துவிட்டு, தனது பையை வாங்கிக் கொண்டு வரலாம் என்று புறப்படுகிறார்.

கிராமத்தில் அவன் சொன்ன வீட்டுக்கு சென்று செயினை பற்றிச் சொன்னதும், வீட்டில் உள்ள அனைவரும் அவளை கீதனின் காதலி என்று நினைத்துக் கொண்டு அன்போடு உபசரிக்கிறார்கள்.

உண்மையை சொல்ல எவ்வளவுதான் முயன்றாலும் யாரும் இவருடைய பேச்சை கேட்பதாயில்லை. அவரும் தனது அக்கா ஊருக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பதால் வேறு வழியின்றி அங்கேயே தங்குகிறாள்.

மறுமுனையில், கீதன், ஈஷா விட்டுச் சென்ற பையை எடுத்துக் கொண்டு தனது காதலியை பார்க்க சென்னைக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்புகிறார்.

வந்த இடத்தில் ஈஷாவை தன்னுடைய காதலி என்று தன்னுடைய குடும்பமே நினைத்துக் கொண்டிருப்பதை கண்டதும் அதிர்ச்சியடைகிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க கீதனின் குடும்பம் முடிவு செய்கிறது.

இந்த குழப்பத்திற்கு மத்தியில் கீதன் ஈஷாவை கரம்பிடித்தாரா? அல்லது தனது காதலியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் கீதனுக்கு இதுதான் முதல்படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், ரொமான்ஸ், கோபம், வெகுளித்தனம், சண்டைக்காட்சி என எல்லாவற்றிலும் பெரிய நடிகர்களுக்கு சவால் விடுகிற அளவுக்கு நடித்திருக்கிறார்.

ஈஷாவும் தன் பங்குக்கு நாயகனுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்.

நாயகனின் மாமாவாக வரும் அர்ஜுனன் படத்தில் காமெடி கதாபாத்திரத்தை சுமந்து சென்றிருக்கிறார். இதுவரை மாடர்ன் பையனாக பார்த்த இவரை, இந்த முறுக்கு மீசை, வேஷ்டி சட்டை சகிதமாக பார்க்கும்போது கிராமத்து இளைஞனாக மனதில் பதிகிறார்.

இவரும், நாயகனின் தாத்தாவாக வரும் சங்கிலி முருகனும் இணைந்து செய்யும் காமெடிகள் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

கிராமத்து பின்னணியில் ஒரு அழகான காதல் மற்றும் செண்டிமென்ட் கலந்த ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரான்சிஸ் மார்கஸ். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கிராமத்து படத்தை ரசிக்கும்படி கொடுத்தற்கு அவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். அதேபோல், நிறைய பேர் புதுமுகங்களாக தெரிந்தாலும், அவர்களை அழகாக வேலை வாங்கியிருக்கிறார்.

ஆனால், ஒரேயொரு இடத்தில் மட்டும்தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ஈஷா எதற்காக ஜெயிலுக்கு போனார் என்பதை கடைசி வரை சொல்லாமல் சென்றதுதான்.

படத்திற்கு மிகப்பெரிய பலமே இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும் பாடலும். கிராமத்து பின்னணியில் உருவாகும் படங்களுக்கு இசையமைப்பது இளையராஜாவுக்கு கைவந்த கலை.

அதை இந்தப் படத்திலும் சிறப்பாக செய்திருக்கிறார். மேலும், யுகாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஓய்’ ஒய்யார நடை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online