உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள படம் மனிதன். ஐ.அஹமத் இயக்கியுள்ள இப்படத்தில் ராதாரவி, பிரகாஷ்ராஜ், விவேக், சங்கிலி முருகன், மயில்சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசை- சந்தோஷ் நாராயணன்; ஒளிப்பதிவு – மதி. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் 29-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படம் குறித்த தகவல்களை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் தனது கதாபாத்திரம் குறித்து பேசுகையில், “இதுவரை பெரும்பாலும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த நான், இந்த படத்தில் மிகவும் அழுத்தமான வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் முக்கிய அம்சமாக சமூக கருத்தும் இருக்கிறது.
வக்கீலாகி மாமன் மகளான ஹன்சிகாவை திருமணம் செய்யும் நோக்கத்தில் ஊரில் இருந்து சென்னைக்கு வருகிறேன். வந்ததும் ஒரு கேஸை எடுத்து நடத்துகிறேன். எனக்கு எதிராக மிகப் பிரபலமான வக்கீலான பிரகாஷ் ராஜ் வாதாடுகிறார். அவரை எதிர்த்து அந்த வழக்கில் எப்படி ஜெயிக்கிறேன் என்பதுதான் கதையின் மையக்கரு.
இதுவரை நடித்த படங்களில் எல்லாம் எனக்கு வசனம் குறைவாகவே இருந்தது. இப்படத்தில் வக்கீல் கதாபாத்திரம் என்பதால் ஏகப்பட்ட வசனம் உள்ளது. பிரகாஷ் ராஜ், ராதாரவி சம்பந்தப்பட்ட காட்சிகளில் நிறைய வசனம் பேசி நடித்திருக்கிறேன். நன்றாக நடித்திருப்பதாக திருப்தி. படம் என்பது 29-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் வெற்றி மக்கள் கையில்தான இருக்கிறது.
ஓகேஓகே படத்திற்குப் பிறகு ஹன்சிகா இப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்திருக்கிறார். இதில், அவருக்கு ஆசிரியை கதாபாத்திரம், படம் முழுக்க என் கேரக்டரை வழிநடத்தும்படியான கேரக்டரில் நன்றாக நடித்திருக்கிறார்” என்றார்.
இயக்குனர் அஹமத் கூறும்போது, ‘சென்னையில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறோம். இப்படத்தில் உதயநிதிக்கு வசனங்கள்அதிகம் பேசக்கூடிய ஒரு கேரக்டர். பிரகாஷ் ராஜ், ராதாரவி ஆகியோரின் நடிப்பு எப்போதுமே சிறப்பாக இருக்கும். அவர்களுக்கு இணையாக செய்தால்தான் எடுபடும். அந்த வகையில் உதயநிதி தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருகிறார். திரையில் பார்க்கும்போது அது தெரியும்.
இதுதவிர விவேக்கும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கே உரித்தான தொடர் காமெடியாக இல்லாமல், இடை இடையே ரசிக்கும்படியான காமெடி இருக்கும்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. மதியின் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கும். மொத்தத்தில் அனைவருக்கும் பிடித்தமாக படமாக மனிதன் இருக்கும்’ என்றார்.