பீப் சாங் பிரச்சனை எழுந்த போது, நடிகர் சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார். அதற்கு சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தற்போது பதில் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, சிம்பு வெளியிட்டதாக கூறப்பட்ட பீப் பாடல் சர்ச்சையை கிளப்பியது. அப்போது நடிகர் சங்கம் சார்பில் கருத்து தெரிவித்த நடிகர் விஷால், மகளிர் அமைப்பிடம் சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
விஷாலின் கருத்தால் கோபமடைந்த சிம்பு, தற்போது நடிகர் சங்கத்திலிருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சிம்புவின் தந்தை டி.ஆர் “சமீபத்தில் விஷால் கொடுத்த விளக்கத்தில் , பீப் சாங் பிரச்சனை எழுந்த போது, நடிகர் சங்கம் சார்பில் எங்களை தொடர்பு கொண்டு பேசியபோது, நாங்கள் சட்டப்படி சந்தித்துக்கொள்கிறோம் என்று சொன்னதாக கூறியுள்ளார்.
அது உண்மைதான். அந்த பாடலை என் மகன் சிம்பு வெளியிடவில்லை. யாரோ திருடி வெளியிட்டு விட்டார்கள் என்ற உண்மையை நிரூபிக்கவே நீதிமன்றத்தில் போராடிவருகிறோம்.
ஆனால், என் மகன் சிம்பு மகளிர் அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஷால் கூறியிருந்தார். செய்யாத தவறுக்கு சிம்பு ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும்?. அது எனக்கும், சிம்புவிற்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு நடிகருக்கு பிரச்சனை எனில், நடிகர் சங்கம் உதவ வேண்டும் அல்லது விலகி விட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, சிம்புவிற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அருமை சகோதரர் நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறியிருந்தார். அவரும் நடிகர் சங்கத்தில்தான் இருக்கிறார்.
சிம்பு மட்டுமல்ல, எதிர்காலத்தில் எந்த நடிகருக்கும் பிரச்சனை ஏற்படும் போது, நடிகர் விஷால் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று விரும்புகிறேன்.
நடிகர் சங்கத்திலிருந்து சிம்பு விலகக்கூடாது என்பதே என்னுடைய கருத்தும் ஆகும். ஆனால் முடிவெடுப்பது சிம்புவைன் கையில்” என்று கூறினார்.