MENUMENU

மனிதன் – திரை விமர்சனம்

1461853800_manithanகோயம்புத்தூரில் வக்கீல் தொழில் செய்துவரும் உதயநிதி, ஏதாவது ஒரு வழக்கில் வெற்றிபெற்று, தனது மாமா மகளான ஹன்சிகாவை பெண் கேட்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்து வருகிறார். ஆனால், இவருடைய போதாத காலம் எந்த வழக்கிலும் இவரால் வெற்றி பெறமுடியவில்லை.

இதனால், இவரது சக நண்பர்கள் இவரை கேலி, கிண்டல் செய்து மனதளவில் அவரை காயப்படுத்துகிறார்கள். ஒருநாள் ஹன்சிகா மற்றும் அவரது அப்பா முன்பாகவே, உதயநிதியை அவரது நண்பர்கள் கேலி, கிண்டல் செய்ய ஹன்சிகா கோபத்தில் உதயநிதியை பலமாக திட்டிவிடுகிறார்.

இதனால் சோகத்தில் கோவையிலிருந்து சென்னைக்கு சென்று, அங்கு வக்கீலாக இருக்கும் இவரது உறவினரான விவேக்குடன் சேர்ந்து வழக்குகளை தேடி அலைகிறார். அங்கேயும் உதயநிதிக்கு எந்த கேஸும் கிடைப்பதில்லை.

இந்நிலையில், மிகப்பெரிய செல்வந்தரின் மகன் ஒருவன் போதையில் காரை ஓட்டி, சாலை ஓரத்தில் உறங்கியவர்கள் மீது ஏற்றி 6 பேரை கொன்று விடுகிறார். இந்த வழக்கில் பிரபல வக்கீலான பிரகாஷ்ராஜ் வாதாடி செல்வந்தரின் மகனுக்கு விடுதலை வாங்கி தருகிறார்.

இதை அறியும் உதயநிதி, இந்த வழக்கை கையிலெடுத்தால் தான் பிரபலமாகிவிடலாம் எனவும், அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல விஷயம் செய்துகொடுத்ததுபோல் இருக்கும் என்று எண்ணி இந்த வழக்கை கையிலெடுக்கிறார். இதில், அவருக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.

இந்த பிரச்சினைகளையெல்லாம் அவர் எதிர்கொண்டு வழக்கில் வெற்றிபெற்றாரா? தனது மாமன் மகள் ஹன்சிகாவை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

உதயநிதி முதல்பாதியில் அப்பாவி வக்கீலாக வந்தாலும், பிற்பாதியில் சாலையோரங்களில் தங்கி வாழும் குடும்பங்களின் துன்பங்களை உணர்ந்து போராடும் வக்கீலாக கைதட்டல் பெறுகிறார்.

இதுவரை இவர் நடித்த கதாபாத்திரத்திங்களில் இருந்து மாறுபட்ட படம். இரண்டு பெரிய நடிகர்களான ராதாரவி, பிரகாஷ்ராஜ் இவர்களின் நடிப்பிற்கு இடையே தன்னுடைய கதாபாத்திரத்தை திறமையாக செய்த இவருக்கு சபாஷ் போடலாம்.

டீச்சராக வரும் ஹன்சிகா மொத்வானி, உதயநிதியை வழிநடத்தி செல்லும் பொறுப்பான காதலியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகனுடன் டூயட் பாடுவது மட்டுமே என்றில்லாமல், இதில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட நடித்திருக்கிறார்.

வக்கீலாக வரும் பிரகாஷ் ராஜ் கோர்ட்டில் வாதாடும் காட்சிகள், நாம் உண்மையான கோர்ட்டில் இருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. வில்லத்தனமான கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர்தான் கச்சிதமாக இருப்பார் என்ற உணர்வை ஒவ்வொரு காட்சியிலும் ஏற்படுத்தியிருக்கிறார்.

இருக்கையில் அமர்ந்தபடியே தனது நடிப்பை தூக்கி நிறுத்தியிருக்கிறார் ராதாரவி. சிறுசிறு வசனங்களைக்கூட மிகவும் அழகாக பதிவு செய்து கைதட்டல் பெறுகிறார்.

குறிப்பாக, பிரகாஷ் ராஜை மிரட்டும் காட்சிகள் இவர் நடிப்பின் உச்சக்கட்டம். உதயநிதியின் உறவினராக வரும் விவேக், வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. காமெடிக்கு மட்டுமில்லாமல், ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார்.

டிவி ரிப்போர்ட்டராக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், மிக துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று அசால்ட்டாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

இயக்குனர் அஹமது, இந்தி படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ரசிக்கும்படியாக அழகாக எடுத்திருக்கிறார். கோர்ட்டு சம்பந்தப்பட்ட கதை என்பதால், கதைக்கு தேவையான அளவான கதாபாத்திரங்களை, அதேநேரத்தில் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், கோர்ட்டு சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்ததும் கதை விறுவிறுப்படைகிறது. குறிப்பாக, கோர்ட்டில் வாதாடும் காட்சிகளில் எல்லாம் இயக்குனர் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

படத்திற்கு மற்றொரு பலம் வசனங்கள்தான். விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் கோர்ட்டில் சாட்சி சொல்லும்போது, அவர் பேசும் வசனங்கள் மனதை உருக்கும்படியாக இருக்கும். அதை அழகாக காட்சிப்படுத்திய இயக்குனருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறார். மதியின் ஒளிப்பதிவு துல்லியமாக இருக்கிறது. கோர்ட்டு காட்சிகள் எல்லாம் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘மனிதன்’ மாமனிதன்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online