உள்நாட்டு யுத்தம் – திரை விமர்சனம்

1747உலகத்தை அழிக்க நினைக்கும் தீவிரவாதக் கும்பல் இந்தமுறை நைஜிரியாவில் உள்ள லாகோஸ் என்ற நகரில் பெரிய தாக்குதல் நடத்த முடிவெடுக்கின்றனர். அதை தடுக்க வழக்கம்போல் அவெஞ்சர்ஸ் அணி அவர்களை எதிர்க்க கிளம்புகிறது.

தீவிரவாத கும்பலுடனான சண்டையில் வக்காண்டா நாட்டை சேர்ந்த சமூக நலத் தொண்டாற்றும் பலர் பலியாகவே, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகின்றன.

அதாவது, இனிமேல் அவெஞ்சர்ஸ் குழு தனித்து இயங்காமல், அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர். அவெஞ்சர்ஸ் குழுவில் இருக்கும் அயர்ன் மேன், தன்னால் ஏற்பட்ட பாதிப்புகளையெல்லாம் எண்ணி இதற்கு ஒப்புக் கொள்கிறார்.

ஆனால், எந்தவித தவறும் செய்யவில்லை என்ற நம்பிக்கையில் கேப்டன் அமெரிக்கா இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

உலக நாட்டின் முக்கிய தலைவர்கள் கூடியிருக்கும் இந்த சந்திப்பு நடக்கும் இடத்தில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நடக்கிறது. இதில் வக்காண்டா நாட்டின் மன்னர் இறந்து போகிறார். இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் கேப்டன் அமெரிக்காவின் நண்பன் விண்டர் சோல்ஜர்தான் காரணம் என்று கூறுகின்றனர்.

இதற்கிடையில், இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான விண்டர் சோல்ஜரை பிடித்துக் கொடுக்க அயர்மேனுக்கு அரசாங்கம் ஆணையிடுகிறது. அதேநேரத்தில், விண்டர் சோல்ஜரை எப்படியாவது தேடிப்பிடித்து பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறார் வக்காண்டா நாட்டு மன்னரின் மகனாக பிளாக் பேந்தர்.

ஆனால், கேப்டன் அமெரிக்காவுக்கு தனது நண்பன் இந்த தவறை செய்திருக்க மாட்டான் என்று எண்ணி, நண்பனை இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்ற அயர்மேனுக்கு எதிராக செயல்படுகிறார். இதனால், அயர்மேனுக்கும் கேப்டன் அமெரிக்காவுக்கும் இடையே பிரச்சினை வருகிறது.

இதன்பிறகு அயர்மேனும், கேப்டன் அமெரிக்காவும் தனித்தனி குழுக்களாக பிரிந்து அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

இறுதியில், இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் மூளையாக செயல்பட்டது யார் என்பதை இவர்கள் கண்டுபிடித்தார்களா? இரண்டு குழுக்களுக்கும் உள்ள பிரச்சினை முடிவுக்கு வந்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

கேப்டன் அமெரிக்கா என்று படத்திற்கு தலைப்பு வைத்திருந்தாலும், இந்த படத்தில் அயர்மேன் உள்ளிட்ட அவெஞ்சர்ஸ் குழுவில் உள்ள அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். முன்னாள் வந்த அவெஞ்சர்ஸ் படங்களைப்போலவே, இதிலும் ஆக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு குறைவில்லை.

எப்போதும் எதிரிகளை எதிர்த்து போராடும் அவெஞ்சர்ஸ், இதில் அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொள்வது பார்ப்பவர்களுக்கு புதிதாகவும், அந்த கதாபாத்திரங்கள் உணர்வுப்பூர்வமாக நடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதை இயக்குனர் நன்றாகவே வேலை வாங்கி இயக்கியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த அவெஞ்சர்ஸ் குழுவில் தற்போது ஸ்பைடர்மேன், பிளாக் பேந்தர் ஆகிய இரண்டு பேரையும் புதிதாக சேர்த்திருக்கிறார்கள். இவர்கள் இந்த குழுவில் எப்படி இணைகிறார்கள் என்பதற்கு கூறும் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

மார்வல் படங்களுக்கே உண்டான ஒற்றை வரியில் பேசும் காமெடி வசனங்கள் எல்லாம் இந்த படத்திலும் இருக்கிறது. அவை எல்லாமே ரசிகர்களை கலகலப்பூட்டியிருக்கிறது. குறிப்பாக, ஸ்பைடர்மேன் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு.

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ஒளிப்பதிவு. சண்டைக்காட்சிகளில் ஒளிப்பதிவின் பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது. அதேபோல், சேசிங் காட்சிகளிலும் ஒளிப்பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது.

இறுதிக்காட்சி அடுத்து வரும் மார்வல் படங்களுக்கு நல்ல அஸ்திவாரத்தை போட்டுக் கொடுத்துள்ளது என்று சொல்லலாம். வழக்கமாக அரைத்த மாவையே இந்த படத்திலும் அரைத்திருந்தாலும், மக்களுக்கு பிடித்த மாதிரி படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘உள்நாட்டு யுத்தம்’ பிரம்மாண்ட யுத்தம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online