அனைவரும் வாக்களிப்போம்: நடிகர் – டைரக்டர் சசிகுமார் அறிக்கை

201605160841562105_vote-for-Everyone-actor-director-Sasikumar-Report_SECVPFதேர்தலில் அனைவரையும் வாக்களிக்கக் கோரி தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இயக்குநரும், நடிகருமான சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

கல்வி தொடங்கி பொருளாதாரம், விஞ்ஞானம் என எல்லாவிதங்களிலும் நாம் வளர்ந்திருக்கிறோம். உள்ளங்கைகளில் உலகத்தை இயக்குகிற அளவுக்கு தெளிவோடும், அறிவோடும் நாம் இருக்கிறோம். ஆனால், வாக்களிக்கும் சதவீதத்தில் மட்டும் நாம் இன்னும் 60 சதவீதத்தைக் கடக்காதவர்களாகவே இருக்கிறோம்.

சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் 97 சதவீத அளவுக்குப் பதிவான வாக்கு, இப்போது 60 சதவீதமாக சுருங்கிப் போனது ஏன்? 40 சதவீத மக்கள் தேர்தலில் வாக்களிக் காமல் ஒதுங்கி இருப்பது இந்த தேசத்துக்கான எவ்வளவு பெரிய தோல்வி?

குடும்ப விழாக்களிலும், உறவினர்கள் நிகழ்வுகளிலும் தகப்பனாக, தாய்மாமனாக, சகோதரனாக நமது உரிமையை நாம் விட்டுக் கொடுக்கிறோமா? நம் கடமையை முன்னின்று செய்வதைத்தானே வீட்டுக்கான பெருமையாக நினைக்கிறோம். அப்படியிருக்க இந்த நாட்டுக்கான பெருமையை நாம் செய்யாமல் வேறு யார் செய்வது?

தேர்தலில் பங்கேற்காமல், அதனையும் ஒரு விடுமுறை நாளாகக் கருதி பொழுதுபோக்குகளிலும், வேறு வேலைகளிலும் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம்? கிராமங்களில் வசிக்கும் பாட்டிகள்கூட குச்சியை ஊன்றியபடி தட்டுத் தடுமாறியபடி வந்து வாக்கு செலுத்துகிறார்கள். அந்தப் பொறுப்புணர்வைப் பார்த்தாவது நாம் பக்குவப்பட வேண்டாமா?

நாம் விரலில் சுமக்கப்போகும் மைதான் இந்தத் தேசத்தின் தலையெழுத்தை எழுதப் போகிறது. 100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமாகும் நாள்தான் ஜனநாயகத்துக்கான வெற்றி நாளாக இருக்கும். எனவே, அனைவரும் வாக்களிப்போம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சசிகுமார் கூறியிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries