MENUMENU

ஒருநாள் கூத்து – திரை விமர்சனம்

Oru-Naal-Koothu-Official-First-Look-Teaserஐடி கம்பெனியில் பணிபுரிந்து வரும் தினேஷும், அதே கம்பெனியில் கூடவே பணிபுரிந்துவரும் நிவேதா பெத்துராஜுவும் காதலித்து வருகிறார். நிவேதா பெத்துராஜ் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். தினேஷோ நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.

வாழ்க்கையில் செட்டிலான பிறகுதான் கல்யாணம் என்ற முடிவில் இருக்கிறார் தினேஷ். ஆனால், நிவேதாவோ தனது பெற்றோரிடம் தினேஷை அறிமுகப்படுத்தி, விரைவில் கல்யாணம் பண்ணிக்கொள்ள முடிவெடுக்கிறார். ஆனால், தினேஷோ இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்துகொள்ள, நிவேதாவுக்கும் தினேஷுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டு பிரிந்துபோகிறார்கள்.

இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம், தனியார் எப்.எம்.மில் ஆர்.ஜே.வாக பணிபுரியும் ரித்விகாவுக்கு அவரது அண்ணன் கருணாகரன் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்.

நீண்டநாட்களாக மாப்பிள்ளை கிடைக்காமல் கடைசியில் ஒரு மாப்பிள்ளையை பார்த்து அவருக்கு நிச்சயமும் செய்துவிடுகின்றார். நிச்சயதார்த்தத்துக்கு பிறகு மாப்பிள்ளைக்கு ரித்விகாவை பிடிக்காமல் போய்விடுகிறது. இருப்பினும், மாப்பிள்ளையை சமதானம் செய்யும் முயற்சியில் கருணாகரன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இன்னொரு பக்கம், ஆசிரியரின் மகளான மியா ஜார்ஜுக்கு அவளது அப்பா பெரிய இடத்தில் தனது பெண்ணை திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்ற குறிக்கோளோடு வருகிற வரன்களை எல்லாம் தட்டிக் கழித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு பெரிய பணக்காரரின் சம்பந்தம் கிடைக்கிறது. மாப்பிள்ளை வீட்டார் மியா ஜார்ஜின் குடும்பம் தங்களது குடும்பத்தின் தகுதிக்கு குறைவானது என்று கூறி இந்த சம்பந்தத்தை தட்டி கழிக்கின்றனர். ஆனால், மாப்பிள்ளைக்கு மியா ஜார்ஜை பிடித்துப்போக, தனது பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி, மியா ஜார்ஜை கைபிடிக்க முடிவெடுக்கிறார்.

இப்படியாக மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெறும் வெவ்வேறு சம்பவங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கிறது. அப்போது அங்கு என்னென்ன திருப்பங்கள் ஏற்படுகிறது என்பதை சொல்லும் படமே ‘ஒருநாள் கூத்து’.

தினேஷ் இந்த படத்தில் ரொம்பவும் எதார்த்தமாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அது அவருக்கு பெரியதாக எடுபடவில்லை. படம் முழுக்க சோகம் வழிந்த முகத்துடனேயே வலம் வந்திருக்கிறார்.

ரொமான்ஸ் காட்சிகளில் எல்லாம் தினேஷ் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிவேதா பெத்துராஜ் அறிமுகமாகும் முதல் படம் என்றாலும் தினேஷை வலிய வலிய காதலிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். பார்க்கவும் அழகாக இருக்கிறார்.

ஆர்.ஜே.வாக வரும் ரித்திகாவுக்கு பொருத்தமான கதாபாத்திரம். நீண்ட இடைவெளிக்குபிறகு இப்படத்தில் இவருக்கு நல்லதொரு கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். இந்த மாதிரியான கதாபாத்திரத்தை எடுத்து செய்ததற்கு பாராட்ட வேண்டிய விஷயம். ரமேஷ் திலக்குக்கும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

மியா ஜார்ஜ் படத்தில் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார். இவருக்கான வசனங்கள் குறைவுதான் என்றாலும், தனது முகபாவனையிலேயே அனைவரையும் அசத்தி இருக்கிறார்.

தினேஷின் நண்பராக வரும் பாலசரவணன் வரும் காட்சிகள் கலகலப்புக்கு குறைவில்லாமல் கொண்டு சென்றிருக்கிறது. கருணாகரன், சார்லி ஆகியோரும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கல்யாணம் என்பது ஒருநாள் கூத்து. அதற்காக எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை இந்த படத்தின் மூலம் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் சொல்லியிருக்கிறார். படத்தின் மூன்று வெவ்வெறு கதைகள் இருப்பதால் படத்தின் ஆரம்பம் கொஞ்சம் நீளமாக செல்வது போரடிக்கிறது. இருந்தாலும், கிளைமாக்ஸ் காட்சியை சுவாரஸ்யமாக முடித்திருப்பது சிறப்பு.

ஐஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான் என்றாலும் ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை தேவைக்கேற்ப இருக்கிறது. கோகுல் பினாயின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிரோட்டமாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘ஒருநாள் கூத்து’ ஒருமுறை பார்க்கலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online