நடிகை திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. சில வருடங்களுக்கு முன்பே இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பட விழாக்களில் ஜோடியாக கலந்துகொண்டார்கள். விருந்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்கள். அவர்கள் ஒன்றாக இருப்பது போன்ற படங்களும் இணையதளங்களில் வெளிவந்தன.
அதன் பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பட விழாக்களுக்கு சேர்ந்து வருவதை தவிர்த்தார்கள். வேறு நடிகைகளுடன் ராணா ரகசிய தொடர்பு வைத்து இருப்பதாக தகவல் பரவியதால் திரிஷா சண்டை போட்டு பிரிந்ததாக கூறப்பட்டது. பின்னர் திரிஷாவுக்கும் பட அதிபர் வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடித்து நிச்சயதார்த்தத்தையும் முடித்தார்கள்.
ஆனால் திடீரென்று அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். நிச்சயதார்த்தமும் ரத்தானது. இதற்கிடையில் ராணாவை நடிகைகள் ஸ்ரேயா, காஜல் அகர்வால் ஆகியோருடன் இணைத்து தெலுங்கு திரையுலகினர் கிசுகிசுத்தார்கள்.
பட விழாக்களில் ஸ்ரேயாவுடன் கைகோர்த்தபடி ராணா கலந்து கொண்டார். தற்போது இந்த இரண்டு நடிகைகளுடனான தொடர்பை அவர் துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராணாவுக்கும், நிச்சயதார்த்தம் ரத்தான திரிஷாவுக்கும் இடையே மீண்டும் காதல் துளிர்த்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அதை உறுதிபடுத்துவது போல் அவர்கள் இப்போது ஜோடியாக விழாக்களுக்கு வருகிறார்கள்.
திரிஷாவை காதலிப்பதாக வெளியான தகவலுக்கு ராணா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
‘‘என்னை பல நடிகைகளுடன் இணைத்து பேசுகிறார்கள். என்னுடன் நடித்த நடிகைகளுடன் நான் நட்பாக பழகுகிறேன். அதை வைத்து இதுபோன்ற வதந்திகள் பரவுகின்றன. திரிஷாவுடன் நட்பு ரீதியான தொடர்புதான் வைத்து இருக்கிறேன். நான் நடிகைகள் யாரையும் இதுவரை காதலிக்கவில்லை. நடிப்பில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.’’
இவ்வாறு ராணா கூறினார்.
ராணா மறுப்பு சொன்னாலும் திரிஷாவுக்கும் அவருக்கும் காதல் மலர்ந்து இருப்பது உண்மை என்கின்றனர் தெலுங்கு பட உலகினர்.