கதாநாயகர்களைப்போல் சினிமாவில் அறிமுகமாகும் வாரிசு நடிகைகள்

201606280831300122_film-introduction-as-the-successor-to-the-actress_SECVPFதிரையுலகில் வாரிசு நடிகர்களை களம் இறக்குவதுதான் வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது. மகள்களை சினிமாவுக்கு கொண்டு வர முன்னணி கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள் விரும்பியது இல்லை. பிரபு, விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், பிரசாந்த், சிபிராஜ், பிருத்வி, மனோஜ் என்று வாரிசு நடிகர்களே வலம் வந்துள்ளனர். இவர்களில் பலர் முன்னணி கதாநாயகர்களாகவும் உயர்ந்தார்கள்.

ஆனால் சமீபகாலமாக இந்த மனப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. மகள்களையும் சினிமாவில் இறக்கிவிடும் போக்கு அதிகரிக்கிறது. சினிமா பாதுகாப்பான தொழிலாக தற்போது பார்க்கப்படுவதாலும், நட்சத்திர அந்தஸ்து, வருமானம் அனைத்திலும் திருப்தி கிடைப்பதாலும் வாரிசு நடிகைகள் வரத்து அதிகரிக்கிறது என்கிறார் மூத்த நடிகர் ஒருவர்.

கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் கலக்கி வருகிறார். இவர் கதாநாயகியாக நடித்த முதல் இந்தி படம் லக், 2009-ல் வந்தது. தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். பவன்கல்யாண், ரவிதேஜா, ராம்சரண் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது அவரது தந்தை கமல் இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு படத்திலும் நடிக்கிறார்.

இதுபோல் கமலின் இன்னொரு மகளான அக்ஷராவும் இந்தியில் ஷமிதாப் படத்தில் கதாநாயகியாக நடித்து விட்டு இப்போது கமலின் சபாஷ்நாயுடு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் இயக்குனர்களாகி விட்டனர்.

மூத்த மகள் ஐஸ்வர்யா, கணவர் தனுசை வைத்து 3 மற்றும் கவுதம் கார்த்திக் நடித்த வைராஜா வை படங்களை இயக்கினார். இளைய மகள் சவுந்தர்யா ரஜினியை வைத்து கோச்சடையான் அனிமேஷன் படத்தை டைரக்டு செய்தார். கோவா படத்தை தயாரிக்கவும் செய்தார்.

நடிகர் அர்ஜுன், தனது மகள் ஐஸ்வர்யாவை விஷாலின் பட்டத்து யானை படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். தற்போது ‘காதலின் பொன் வீதியில்’ என்ற படத்தில் மகளை கதாநாயகியாக நடிக்க வைத்து அவரே தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் டைரக்டும் செய்கிறார்.

போடா போடி, பாலாவின் தாரைதப்பட்டை படங்களில் நடித்து பிரபலமான சரத்குமார் மகள் வரலட்சுமி இப்போது மேலும் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

முன்னாள் கதாநாயகி ராதா தனது மூத்த மகள் கார்த்திகாவை சினிமாவில் அறிமுகம் செய்தார். ஜீவா ஜோடியாக நடித்த கோ படம் அவரை பிரபலபடுத்தியது. தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கொடி படத்திலும் நடித்தார்.

தற்போது தமிழில் வா டீல் மற்றும் மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இன்னொரு மகளான துளசியை மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஜீவாவுடன் யான் படத்திலும் அவர் நடித்தார்.

இன்னொரு முன்னாள் கதாநாயகியான மேனகாவும் தனது மகள் கீர்த்தி சுரேசை சினிமாவுக்கு கொண்டு வந்துள்ளார். கீர்த்தி சுரேசுக்கு சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த ரஜினி முருகன் படம் வெற்றிகரமாக ஓடி திருப்புமுனையை ஏற்படுத்தியது. மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தற்போது விஜய்யின் 60-வது படத்தில் அவருக்கு ஜோடியாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்து இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களும் கைவசம் வைத்துள்ளார்.

ஏற்கனவே பாக்யராஜும் தனது மகள் சரண்யாவை பாரிஜாதம் என்ற படத்தில் கதாநாயகியாக்கி அந்த படத்தை இயக்கவும் செய்தார். பழைய நடிகை ஸ்ரீதேவியும் தனது மகள் ஜானவியை கதாநாயகியாக்க முடிவு செய்து அவருக்கு நடிப்பு-நடன பயிற்சிகள் அளித்து வருகிறார். மேலும் பல வாரிசு நடிகைகள் களம் இறங்க தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries