MENUMENU

அட்ரா மச்சான் விசிலு – திரை விமர்சனம்

adra-machan-visilu-poster-1மதுரையில் வசிக்கும் சிவா, சென்ட்ராயன், அருண் பாலாஜி மூவரும் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். மூன்று பேருக்கும் போதியான வருமானம் இல்லாவிட்டாலும், பவர் ஸ்டார் படம் வெளிவரும் போதெல்லாம் கடன் வாங்கியாவது கட்அவுட் வைப்பது போஸ்டர் அடிப்பது, பாலாபிஷேகம் செய்வது என ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் சிவாவை நாயகி நைனா சர்வார் காதலித்து வருகிறார். எந்த வேலைக்கும் செல்லாத சிவாவுக்கு அவ்வப்போது பண உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில், அப்புக்குட்டி ரசிகர்களுக்கும், பவர் ஸ்டாரின் ரசிகர்களான நண்பர்களுக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இதை, அவ்வப்போது போலீஸ் அதிகாரியான ராஜ்கபூர் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கிறார்.

ஒருமுறை ராஜ்கபூர், சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு உங்களை வைத்து உங்கள் தலைவர் பெரிய நிலைக்கு ஆளாகிவிட்டார். அவரை வைத்து நீங்கள் ஏன் பெரிய நிலைக்கு வரக்கூடாது. அவருடைய படங்களை வாங்கி, மதுரை ஏரியாவில் விநியோகம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். நண்பர்களும் அவரது அறிவுரையை ஏற்று, பணத்தை திரட்டி பவர் ஸ்டாரின் மேனேஜரான சிங்கமுத்துவிடம் ஒப்படைக்கிறார்கள்.

சிங்கமுத்துவும் மதுரை ஏரியா விநியோகஸ்தர் உரிமையை சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு கொடுக்கிறார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இதனால் நண்பர்கள் நஷ்டமடைகிறார்கள். இழந்த பணத்தை திருப்பி கேட்பதற்காக பவர் ஸ்டாரை நேரில் சந்திக்கிறார்கள். ஆனால், பவர் ஸ்டாரோ பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என கூறி இவர்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறார்.

இதனால் மனமுடைந்த நண்பர்கள் தங்கள் பணத்தை பவர் ஸ்டாரிடமிருந்து மீட்டு அவருக்கு நல்ல பாடம் புகட்ட எண்ணுகிறார்கள். இதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

பவர் ஸ்டார் இந்த படத்தில் வில்லன் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகராகவே வரும் அவர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

இவர் படத்தில் பேசும் பஞ்ச் டயலாக்குகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் கண்டிப்பாக காதை பிளக்கும். மற்றவர்களை காப்பியடித்து நடித்தாலும், அதில், தனக்கு என்ன வருமோ அதை சரியாகவே செய்திருக்கிறார்.

சிவா இன்னும் கொஞ்சம் அவரது முகத்தில் நடிப்பை வரவழைக்க முயற்சிக்கலாம். ரொமான்ஸ், சோகம், பழி வாங்க துடிப்பது என ஒவ்வொரு இடத்திலும் ஒரேமாதிரியான முகபாவனையில் நடித்திருந்தாலும் டைமிங் காமெடியால் ரசிக்க வைக்கிறார்.

இவர் ஆடும் நடனத்துக்காக இவருக்கு அடுத்த பாக்யராஜ் என்று பட்டம் கொடுக்கலாம் என்பதுபோல் இருக்கிறது. சென்ட்ராயன் இதுவரையிலான படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்தவர், இந்த படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். தனது கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

மற்றொரு நாயகனாக வரும் அருண் பாலாஜியும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகி நைனா சர்வாரும் அவருடைய பகுதியை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

பார்க்க கொழுக் மொழுக்வென கவர்ச்சியிலும் கிறங்கடித்திருக்கிறார். பவர்ஸ்டாரின் மேனேஜராக வரும் சிங்கமுத்து, அரசியல் நையாண்டியையும் உள்ளே புகுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் சிறு சிறு கதாபாத்திரங்களும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

‘கச்சேரி ஆரம்பம்’ என்ற அதிரடியான ஒரு படத்தை இயக்குனர் முழுக்க முழுக்க காமெடியாக ஒரு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் திரைவண்ணன். முதல் பாதி பவர் ஸ்டாரின் காமெடி என கதை நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சிங்கமுத்து மற்றும் சிவாவின் நண்பர்கள் செய்யும் லூட்டி கலகலப்பூட்டியிருக்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். குறிப்பாக, ‘யாரு யாரு இவ’ பாடல் ரசிகர்களை துள்ளி ஆட்டம் போட வைக்கிறது. ‘தேவதை தேவதை’ பாடல் அழகான மெலோடி என ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு சிறப்பாக கொடுத்திருக்கிறார். காசி விஸ்வா ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘அட்ரா மச்சான் விசிலு’ விசிலடிக்கலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online