உலக அழகியுடன் சேர்ந்து ஹைடெக் கார் திருடும் நட்டி

201607131258496577_Natti-high-tech-car-theft-joint-with-miss-world_SECVPF‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு பிறகு ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜுக்கு தொடர்ந்து சினிமாவில் ஹீரோ வேடங்கள் தேடி வருகிறது. அதில் தனக்கு பொருத்தமான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது ‘போங்கு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ருஹி சிங் என்பவர் நடிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்தியில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடன் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், பாவா லட்சுமணன், மயில்சாமி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை தாஜ் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் சாபு சிரிலுடன் உதவியாளராக பணியாற்றியவர். இந்த படத்தில் நட்டி ஹைடெக் கார் திருடுபவராக நடிக்கிறார். இவருடன் நாயகியும் சேர்ந்து கார் திருடுவாராம். இப்படத்தில் நட்ராஜின் தோற்றம் இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்டைலாக இருக்குமாம்.

இப்படத்தில் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த காரை வாங்குவதற்காக இந்தியா முழுவதும் அலைந்து, கடைசியில் அகமதாபாத்தில் தேடிக் கண்டுபிடித்து, அந்த காரை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த காருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாம். இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, அகமதாபாத், மதுரை ஆகிய இடங்களில் நடத்தியுள்ளனர்.

இப்படத்திற்காக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஒன்றை ஒரு வெட்ட வெளி பொட்டலில் நடத்தியுள்ளார்கள். கடுமையான வெயில் மற்றும் புழுதி காற்றுக்கு இடையில் மிகவும் கஷ்டப்பட்டு இந்த காட்சிகளை படமாக்கியுள்ளார்கள்.

இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கபிலன், தாமரை, மதன்கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள். ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ரகுகுமார், ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online