நடிகைகளுக்கு பட வேலைகள் மத்தியில் ஓய்வு கிடைப்பது அரிது. ஆனாலும் ஒரு படத்தை முடித்து அடுத்த படத்துக்கு தயாராவதற்கு இடையில் ஓரிரு வாரங்கள் கட்டாய விடுப்பு எடுத்து பிடித்த இடங்களை சுற்றிப் பார்ப்பதற்காக குடும்பத்துடன் கிளம்பி விடுகிறார்கள்.
அங்கு விதவிதமான உணவுகளை சாப்பிடுவது, பெரிய வணிக வளாகங்களுக்கு ஷாப்பிங் போவது, அடையாளம் கண்டு பிடிக்காத வெளிநாட்டினர் கூட்டத்தில் சந்தோஷமாக சுற்றி திரிவது என்று விடுமுறையை அனுபவித்து நாடு திரும்புகிறார்கள்.
நடிகைகளுக்கு பிடித்தமான இடங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது.
நடிகை அனுஷ்கா இதுகுறித்து கூறியதாவது:-
“எனக்கு பிடித்தமான இடம் லண்டன். முதன்முதலாக அங்கு படப்பிடிப்புக்கு நான் போனபோது, அதன் அழகை பார்த்து வியந்தேன். அதன்பிறகு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் லண்டனுக்கு பறந்து விடுகிறேன். ஒவ்வொரு முறையும் அங்கு போய்விட்டு வரும்போது ஏதோ ஒரு அழகை சுமந்து வந்த மாதிரி உணர்கிறேன்.
லண்டன் மட்டுமன்றி எந்த வெளி நாட்டுக்கு போனாலும் அங்கு ‘ஷாப்பிங்’ போவது எனக்கு பிடிக்காது. பொருட்கள் வாங்க வேண்டும், உடைகள் எடுக்க வேண்டும் என்றெல்லாம் விரும்ப மாட்டேன். அழகான இடங்களை சுற்றிப்பார்ப்பதோடு சரி. எதுவும் வாங்காமலேயே திரும்பி விடுவேன். நண்பர்கள் சொல்லி விட்டால் அவர்களுக்காக பொருட்கள் வாங்கி வருவேன். லண்டனை அடுத்து எனக்கு பிடித்த இடங்கள் என்றால் ஐதராபாத், பெங்களூரு.”
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை தமன்னா கூறியதாவது:-
“எனக்கு மிகவும் பிடித்த இடம் துபாய். எப்போது ஓய்வு கிடைத்தாலும் துபாய்க்கு ஓடி விடுவேன். அங்கு ஷாப்பிங் போவது, ஜாலியாக ஊர் சுற்றுவது என்று இருப்பேன். துரதிர்ஷ்டவசமாக நான் நடித்த படங்களின் படப்பிடிப்புகள் அதிகமாக துபாயில் நடந்தது இல்லை.
அங்கு படப்பிடிப்புக்காக நீண்ட நாட்கள் முகாமிடாமல் இருப்பதிலும் ஒரு சந்தோஷம் இருக்கிறது. படப்பிடிப்புக்காக துபாயில் அடிக்கடி சுற்றினால் அதன்மீதான ஈர்ப்பு குறைந்து விடும்.
நடிகையான பிறகு நிறைய நாடுகளில் சுற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அப்படி சுற்றும்போதெல்லாம் அந்த நாட்டின் கலாசாரம், சுற்றுச் சூழல், மக்களின் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டுதான் வருவேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது:-
“நான் சிறுவயதிலேயே அம்மா, அப்பாவுடன் நிறைய இடங்களுக்கு பயணம் செய்து இருக்கிறேன். அப்போதெல்லாம் அதை அனுபவித்தது இல்லை. நடிகையான பிறகு பயணங்களில் மகிழ்கிறேன். நிறைய நாடுகளில் சுற்றி விட்டேன். ஆனாலும் எனக்கு பிடித்த இடம் கோவாவும், கேரளாவும்தான்.
படப்பிடிப்புக்காக வெளிநாடுகளில் சுற்றும்போது அவற்றின் அழகை ரசிக்க முடியாது. படப்பிடிப்பு, இதர வேலைப்பளுக்கள் எதுவும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்றால்தான் ஜாலியாக அனுபவிக்க முடியும். எனக்கு பிடித்த இடம் பாரீஸ். அங்கு ஓய்வு எடுக்கவும், ஜாலியாக சுற்றவும் நிறைய விஷயங்கள் இருக்கிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை சுருதிஹாசன் கூறியதாவது:-
“சிறுவயதிலேயே வெளியூருக்கு குடும்பத்தினர் கிளம்பும்போது முதல் ஆளாக தயாராகி விடுவேன். அந்த அளவு பயணத்தில் எனக்கு இஷ்டம். அது நடிகையாகி எனது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறி விடும் என்று நினைக்கவில்லை. இப்போது படப்பிடிப்பு மூலம் எனக்கு பிடித்தமான இடங்களை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
பாரீஸ், பாங்காக், கலிபோர்னியா போன்றவை பிடித்த இடங்கள். அங்கு போகும்போதெல்லாம் மனதுக்கு அமைதி கிடைக்கிறது. சிறுவயதில் இருந்தே எனக்கு விருப்பமான இடம் சென்னையில் உள்ள மெரினா பீச்.”
இவ்வாறு அவர் கூறினார்.