கபாலி படத்தின் போஸ்டர் இந்திய திரைஉலக வரலாற்றில் முதல்முறையாக விமானத்தில் இடம் பெற்றது. ஏர்–ஏசியா விமான நிலையம் இதை செய்து இருக்கிறது. இந்த விமானம் மூலம் நாளை பெங்களூரில் இருந்து சென்னை வந்து ‘கபாலி’ படம் பார்க்கும் ரசிகர்களுக்கு உணவு, ‘கபாலி’ படம் பார்க்க முதல் டிக்கெட், தங்கும் வசதி போன்ற பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, ‘கபாலி’ படம் பார்க்க விமானத்தில் வரும் ரசிகர்களுக்காக சிறப்பு விமான தபால் உறை வெளியிடப்படுகிறது. இந்திய வரலாற்றில் ஒரு திரைப்படத்துக்காக சிறப்பு தபால் உறை வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும். கர்நாடக அஞ்சல் வட்டம், சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டம் ஆகியவை இணைந்து இந்த சிறப்பு அஞ்சல் உறையை வெளியிடுகின்றன.
இந்த சிறப்பு அஞ்சல் உறை ‘கபாலி’ படம் பார்க்க விமானத்தில் ரசிகர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்களிடம் இருக்கும் உறையில் பெங்களூர் விமான நிலைய தபால் முத்திரையும், சென்னை வந்தபிறகு சென்னை விமான நிலைய தபால் முத்திரையும் குத்தப்படுகிறது.
இதுதவிர பெங்களூர் விமான நிலையத்தில் ஆயிரம் ‘கபாலி’ சிறப்பு தபால் உறைகளும், சென்னை விமான நிலையத்தில் ஆயிரம் ‘கபாலி’ சிறப்பு தபால் உறைகளும் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தபால் தலை, சிறப்பு தபால் உறைகள் சேர்ப்பவர்களுக்கு இது பயன்படும். இந்த தகவலை சென்னை தபால் நிலைய தலைமை அதிகாரி மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்தார்.