MENUMENU

டிஜிட்டலில் உருவாகும் பழைய படங்கள்: ரஜினி – கமல் படங்களும் டிஜிட்டலில் தயார் ஆகின்றன

201608010823099674_old-films-developing-digital-Rajini-Kamal-movies-is-ready_SECVPFதமிழ் பட உலகம் டிஜிட்டலுக்கு மாறி இருக்கிறது. இந்த தொழில் நுட்பம் தயாரிப்பு செலவையும் குறைத்து விட்டது. பட சுருள்கள் மூட்டை கட்டப்பட்டு விட்டன. சினிமா நவீனத்துக்கு மாறினாலும் பழைய படங்கள் போல் அழுத்தமான கதையம்சம் இல்லாததால் நஷ்டத்தை சந்திக்கின்றன.

கடந்த வருடம் 200-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வந்து 15 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டி உள்ளன. 500 படங்கள் வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் இல்லாமல் பெட்டிக்குள் முடங்கி கிடக்கின்றன.

இந்த நிலையில் டிஜிட்டலில் வெளியான பழைய படங்கள் வசூல் குவிப்பதால் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்களின் பார்வை அந்த படங்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. அவற்றை டிஜிட்டலில் புதுப்பித்து திரைக்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கு சிவாஜிகணேசன் நடித்த கர்ணன் படம் தான் முதலில் அடித்தளமிட்டது.

கர்ணன் படத்தை பல லட்சங்கள் செலவில் டிஜிட்டலுக்கு மாற்றி 2012-ல் தமிழகம் முழுவதும் 72 தியேட்டர்களில் திரையிட்டனர். இந்தப் படம் ரூ.5 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. சென்னையில் ஒரே தியேட்டரில் இந்தப் படம் 155 நாட்கள் ஓடி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது.

தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தையும் மெருகேற்றி டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிட்டார்கள். அந்த படமும் லாபம் பார்த்தது. பின்னர் சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல், வசந்த மாளிகை, பாசமலர், படங்கள் டிஜிட்டலில் வந்தன.

‘சிவகாமியின் செல்வன்’ படத்தையும் தமிழகம் முழுவதும் டிஜிட்டலில் மீண்டும் திரையிட்டனர். அதிக நாட்கள் அந்த படம் ஓடி லாபத்தை அள்ளிக் கொடுத்தது. இரண்டு வாரத்துக்கு முன்னால் சென்னையில் ரசிகர்கள், திரையுலக பிரபலங்களை அழைத்து இந்த படத்தின் 100-வது நாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

தற்போது சிறு பட்ஜெட்டில் தயாராகும் பல புதிய படங்கள் தியேட்டர்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே ஓடுகின்றன. கூட்டம் வராமல் ஒரு காட்சி, இரண்டு காட்சிகள் திரையிட்டு தூக்கி விடும் நிலையும் இருக்கிறது.

இந்த நிலையில் பழைய படங்கள் பல நாட்கள் ஓடி லட்சம், கோடிகள் என்று லாபம் சம்பாதித்து கொடுப்பது அந்த படங்களை டிஜிட்டலுக்கு மாற்றும் ஆசையை தூண்டி விட்டு இருக்கிறது. பழைய படங்களை தூசு தட்டி டிஜிட்டலில் புதுப்பித்து ரிலீஸ் செய்யும் முயற்சியில் பலர் இறங்கி உள்ளனர்.

எம்.ஜி.ஆர், மஞ்சுளா ஜோடியாக நடித்து 1971-ல் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ரிக்‌ஷாக்காரன் படத்தை தற்போது டிஜிட்டலில் புதுப்பித்துள்ளனர். விரைவில் இது திரைக்கு வருகிறது. இந்தப் படம் எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றும் பணிகளை முடித்து ரிலீசுக்கு தயாராக வைத்துள்ளனர். ரகசிய போலீஸ் 115, எங்க வீட்டுப் பிள்ளை, படங்களை டிஜிட்டலில் மாற்றும் பணிகள் நடக்கின்றன.

அடிமைப்பெண், நாடோடி மன்னன், அலிபாபாவும் 40 திருடர்களும், மாட்டுக்கார வேலன், இதயக்கனி, உரிமைக்குரல், படகோட்டி, ஒளிவிளக்கு ஆகிய படங்களும் டிஜிட்டலில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவாஜி கணேசன் நடித்துள்ள ராஜபார்ட் ரங்கதுரை படத்துக்கு டிஜிட்டல் தொழில் நுட்ப வேலைகள் முடிந்துள்ளன. விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.

சிவாஜியின் ராஜா, சிவந்த மண், கவுரவம், தில்லானா மோகனாம்பாள், ராஜராஜ சோழன் போன்ற படங்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றி திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.

ரஜினிகாந்த்-கமல்ஹாசன் நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் ஏற்கனவே டிஜிட்டலில் வெளிவந்தது. தற்போது ‘16 வயதினிலே’ படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து ரிலீசுக்கு தயாராக வைத்துள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரும் நடித்த பழைய படங்கள் பலவற்றை டிஜிட்டலில் மாற்றி ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. பழைய படங்கள் மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online