பெண் கல்வியை வலியுறுத்தும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னை தீவுத்திடலில் தொடங்கி நடந்தது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
காலை 6 மணிக்கு தொடங்கியது. இதை நடிகர் விஷால் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்கள் தற்போது அரிய சாதனைகளை செய்து வருகிறார்கள். அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
பெண் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்துக்கு அதிகாலையிலேயே ஏராளமான பெண்கள் திரண்டு வந்திருப்பது மகிழ்ச்சியானது.
பெண்கள் கல்வி கற்பது ஒட்டு மொத்த குடும்பத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது. சமுதாயத்தில் பெண்களும் சொந்தக் காலில் நிற்பதற்கு கல்வியே அடிப்படை. எனவே பெண் கல்வி பற்றிய விழிப்புணர்வை அடித்தட்டில் இருக்கும் பெண்கள் வரை கொண்டு சேர்ப்பது நமது கடமை.
பெண்கள் முன்னேற்றத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய எப்போதும் நான் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் சிவாஜி மணி மண்டபம் அமைக்கும் பிரச்சினை பற்றி நிருபர்கள் கேட்டதற்கு ‘சிவாஜி மணி மண்டபம் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மேற்கொள்வார் என்று நம்புகிறேன். எங்களால் ஆன முயற்சிகளையும் எடுப்போம்’ என்றார்.