சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ‘குருசிஷ்யன்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான கவுதமி, அதன்பின்னர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், ராமராஜன் உள்ளிட்ட 90-களில் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த கவுதமி, பாபநாசம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
பாபநாசம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த பிறகு, கடந்த வாரம் வெளிவந்த ‘நமது’ படத்திலும் மோகன்லால் ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது பிரபுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கவுதமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
முதிர்ச்சி அடைந்த ஒரு ஜோடியின் காதலை கண்ணியமாக கூறும் இந்த படத்தில் பிரபுவும், கௌதமியும் காதலர்களாக நடிக்கவிருக்கிறார்களாம். இதற்கு முன்னர் பிரபுவும்-கௌதமியும் 1990-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ராஜா கைய வச்சா’ படத்தில் காதலர்களாக நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு மீண்டும் காதலர்களாக நடிக்கின்றனர்.
இந்த படம் குறித்த மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.