சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருககும் ‘ரெமோ’ படத்தின் விளம்பரத்திற்காக ‘சிரிக்காதே’ என்று தொடங்கும் மியூசிக் வீடியோ ஒன்றை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
இந்த வீடியோவை பிரபு ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். இவர், ‘ரெமோ’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவின் தயாரிப்பில் நிவின்பாலி நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருப்பவர்.
மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் ‘சிரிக்காதே’ மியூசிக் வீடியோ சோனி மியூசிக் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 18-ந் தேதி யூடியூப் சேனல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளது. இந்த மியூசிக் வீடியோவுக்கு இசையமைத்திருப்பவர் அனிருத். பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஸ்வரூப் பிலிப் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், அனிருத், அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதிவெங்கடேஷ், இன்னொ கெங்கா, மரியா, ஷாஷங்க் விஜய் மற்றும் கெபாஜெர்மியா ஆகியோர் தோன்றவிருக்கிறார்கள்.
தமிழைத் தொடர்ந்து இந்த மியூசிக் வீடியோவை ஆங்கிலத்திலும் வெளியிடவிருக்கிறார்களாம். தமிழில் வெளியான அடுத்த வாரத்தில் ஆங்கிலப் பதிப்பை வெளியிடவுள்ளார்கள். எம்.டி.வி. நிறுவனம் இந்த ஆடியோவை வெளியிடவிருக்கிறது. ஆங்கிலத்தில் இந்த பாடலை ‘இன்னொ கெங்கா’ பாடியிருக்கிறார். இந்த மியூசிக் வீடியோவை ஆர்.டி.ராஜா, 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.