MENUMENU

தர்மதுரை – திரை விமர்சனம்

dharmadurai-posterவிஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே மூன்று பேரும் ஒரே மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். மூன்று பேரும் நல்ல நண்பர்களாக பழகிக் கொண்டிருக்கையில் சிருஷ்டி டாங்கே மட்டும் விஜய் சேதுபதியை காதலிக்கத் தொடங்குகிறார். அப்போது விஜய் சேதுபதி இப்போதைக்கு படிப்புதான் முக்கியம், படிப்பு முடிந்தபிறகு அதுபற்றி பேசிக் கொள்ளலாம் என்று அவருக்கு அறிவுரை கூறுகிறார்.

இதனால், தமன்னாவுக்கும் விஜய் சேதுபதியை பிடித்துப் போகிறது. இதற்கிடையில், கல்லூரி படிப்பும் முடிவுக்கு வர, அனைவரும் அவரவர் ஊருக்கு திரும்புகிறார்கள். கல்லூரி பேராசிரியர் ராஜேஷின் அறிவுரையை ஏற்று தனது கிராமத்திலேயே டாக்டராக பணிபுரிகிறார் விஜய் சேதுபதி.

இந்நிலையில், அதே கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் விஜய் சேதுபதி. தனது அண்ணன் அருள்தாசை அழைத்துச்சென்று ஐஸ்வர்யாவை பெண் கேட்பதுடன், திருமணத்தை பேசி முடிக்கிறார்.

ஆனால், விஜய் சேதுபதி நன்கு படித்தவராக இருப்பதால், ஏழ்மையான குடும்பத்தில் பெண் எடுப்பது அருள்தாஸ் மற்றும் அவரது தம்பி சௌந்தர்ராஜுக்கு பிடிக்கவில்லை. அதனால், விஜய் சேதுபதிக்கு தெரியாமல் எம்.எஸ்.பாஸ்கரிடம் சென்று அதிக வரதட்சணை கேட்டதால் திருமணம் நின்று போகிறது. அந்த அவமானத்தில் ஐஸ்வர்யாவும் தற்கொலை செய்து கொள்கிறாள்.

உண்மையை அறிந்த விஜய் சேதுபதி, சகோதரர்கள் மீது வெறுப்பு கொள்கிறார். அவர்களை அவமானப்படுத்தும் விதமாக அடிக்கடி குடித்துவிட்டு ஊரில் அனைவரிடமும் தகராறு செய்து வருகிறார். தங்களது குடும்பத்திற்கு இதனால் அவமானம் ஏற்படுவதாக நினைத்து விஜய் சேதுபதியை கொல்ல அருள்தாஸ் மற்றும் அவரது தம்பிகள் திட்டமிடுகிறார்கள்.

அவர்களிடமிருந்து தப்பிக்க விஜய் சேதுபதி ஊரிலிருந்து வெளியேறி, தனது கல்லூரி தோழிகளான தமன்னாவையும், சிருஷ்டி டாங்கேவையும் சந்திக்க புறப்படுகிறார். இறுதியில், தமன்னாவையும், சிருஷ்டி டாங்கேவையும் விஜய் சேதுபதி சந்தித்தாரா? அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? என்பதே மீதிக்கதை.

விஜய் சேதுபதி வழக்கம்போல் இந்த படத்திலும் தனது எதார்த்தமான நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் படங்களில் நடிக்க விஜய் சேதுபதிக்கு சொல்லித் தரவேண்டியதில்லை. அவரே அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி செய்திருப்பது அழகாக தெரிகிறது. ஐஸ்வர்யாவை பறிகொடுத்த வேதனையில் அழும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் கண்கலங்க வைத்துவிடுகிறார்.

தமன்னா இப்படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கவர்ச்சி வேடத்தில் இல்லாமல் ஒரு குடும்ப பாங்கான பெண் வேடத்தில் தமன்னா அழகாக இருக்கிறார். பிற்பாதியில் இவரது நடிப்பு அபாரம். சீனு ராமசாமி அவரை வேலை வாங்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது. சிருஷ்டி டாங்கே ஒருசில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

அதேபோல், ஐஸ்வர்யா ராஜேஷூம் ஒரு சில காட்சிகளே வந்தாலும், அவரது கதாபாத்திரம் படத்தில் நிலைத்து நிற்கிறது. அவரது நடிப்பும் பலே சொல்ல வைக்கிறது. எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்துவரும் அருள்தாஸ், இந்த படத்திலும் தனது திறமையான நடிப்பால் அழுத்தமாக பதிகிறார். சவுந்தர்ராஜாவும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

படத்திற்கு மற்றொரு ஆணிவேராக இருப்பது ராதிகா சரத்குமார்தான். விஜய் சேதுபதியின் அம்மாவாக வரும் இவருடைய நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறைவான வசனங்களாக இருந்தாலும், தேவைக்கேற்ப அதை தெளிவாக பேசி அந்த காட்சிக்கு மெருகூட்டியிருக்கிறார்.

பேராசிரியராக வரும் ராஜேஷின் அறிவுரைகள் எல்லாம் இன்றைய காலத்தில் மருத்துவ படிப்பு படிக்கும் இளைஞர்களுக்கு சவுக்கடிபோல் இருக்கிறது. இயக்குனர் சீனு ராமசாமி வழக்கம்போல் கிராமத்து பின்னணியில் இந்த படத்தையும் கொடுத்திருக்கிறார்.

மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் கிராமத்திலும் பணியாற்ற முன்வரவேண்டும். வெளிநாடு தேடி செல்லக்கூடாது என்று சொல்ல வந்திருக்கும் இயக்குனர், அதனூடே ஒரு அழகான காதலை, குடும்ப பின்னணியில் கலந்து சொல்லியிருக்கிறார். படம் ஆரம்பம் முதல் கடைசி வரை எந்தவொரு காட்சியும் போரடிக்கும் வகையில் இல்லாதது சிறப்பு.

யுவன் இசையில் பாடல்கள் சூப்பர். குறிப்பாக, ‘மக்கா கலங்குதப்பா’ பாடல் தியேட்டரில் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. ‘ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடல் அழகான மெலோடி. பின்னணி இசையும் பலம் சேர்த்திருக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை தெளிவாக காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘தர்மதுரை’ தரமான படம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online