MENUMENU

குற்றமே தண்டனை – திரை விமர்சனம்

Kutrame-Thandanaiகுற்றங்களுக்கு தண்டனை கிடைக்காமல் போனாலும் மனசாட்சிப்படி தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்திருக்கும் படம் குற்றமே தண்டனை.

வங்கிக் கடன்களை வசூல் செய்யும் தனியார் நிறுவனத்தில் நாயகன் விதார்த், நாயகி பூஜா தேவாரியா இருவரும் வேலை பார்க்கிறார்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விதார்த், எதிர்வீட்டில் குடியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டைக் கடந்து செல்லும்போதெல்லாம் உன்னிப்பாக கவனித்தபடி செல்கிறார்.

இந்நிலையில், பார்வைக் கோளாறால் அவதிப்படும் விதார்த், இதற்காக ஒரு டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்கிறார். அவர், கண் மாற்று ஆபரேசன் செய்ய வேண்டும் என்றும் இதற்கு 3 லட்சத்து 20 ஆயிரம் செலவாகும் என்றும் கூறுகிறார்.

பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கையில், எதிர்வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா கொலை செய்யப்படுகிறார்.

ஏற்கனவே அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் ரகுமான் வீட்டில் இருக்கிறார். விதார்த் சென்று கதவைத் தட்டி விசாரித்தபோது ஐஸ்வர்யா இறந்தது தெரியவருகிறது. விதார்த்தைப் பார்த்து அதிர்ச்சி அடையும் ரகுமான், தன்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றும்படி கூறுகிறார். விதார்த்தும் உதவி செய்வதாக கூறிவிட்டு செல்கிறார்.

போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், ரகுமானை தனியாக சந்தித்த விதார்த், தன்னுடைய கண் ஆபரேசனுக்கு பணம் கேட்கிறார். அவரும் கேட்ட பணத்தை கொடுக்கிறார்.

இதுதான் சமயம் என்று மருத்துவமனை நிர்வாகம் மேலும் பணம் கேட்கிறது. அதன்பின்னர் ரகுமான் மற்றும் ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்துபோகும் மற்றொரு வாலிபர் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக பணம் வாங்குகிறார்.

இப்படி லட்சக்கணக்கில் பணத்தை கறந்த விதார்த்துக்கு கண்பார்வை கிடைத்ததா? ஐஸ்வர்யா ராஜேஷ் கொலையில் விதார்த் மூக்கை நுழைக்க என்ன காரணம்? கொலையாளி யார்? என்பதே மீதிக் கதை.

நாயகன் விதார்த்திற்கு யதார்த்தமான கதாபாத்திரம். பார்வைக் கோளாறை சரிசெய்வதற்காக எடுக்கும் முயற்சி, சுயநலத்திற்காக மனசாட்சியை மீறி இரண்டு பேரை பலிகடாவாக்கி அடுத்தடுத்து செய்யும் குற்றங்கள் என அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். படம் முழுக்க அவரது கேரக்டர் பேசுகிறது.

நடுத்தர குடும்பத்து பெண்ணாக வரும் நாயகி பூஜாவுக்கு ஆடம்பரம் இல்லாத கதாபாத்திரம், சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு அழுத்தமான கதாபாத்திரம் ஐஸ்வரியா ராஜேஷ். இடைவேளைக்குப் பிறகே அவருக்கு டயலாக் வருகிறது. மாறுபட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்.

பிரச்சனையில் சிக்கி வெளியே வருவதற்காக பணத்தை தண்ணியாக செலவு செய்யும் தொழிலதிபராக வரும் ரகுமான், விதார்த்துக்கு பக்கபலமான கேரக்டரில் வரும் நாசர், குரு சோமசுந்தரம் ஆகியோரின் நடிப்பும் கதையை தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது.

‘காக்கா முட்டை’ படத்தில் இருந்து சற்று மாறுபட்டு, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் திரில் கலந்த கிரைம் படத்தை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் மணிகண்டன்.

ஒளிப்பதிவிலும் அவரது கைவண்ணம் பளிச்சிடுகிறது. பாடல்கள் இல்லாவிட்டாலும் இளையராஜாவின் பின்னணி இசை, காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘குற்றமே தண்டனை’ மனசாட்சி!

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online