MENUMENU

காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக அறப்போராட்டம்: தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை

201609121839486686_tamil-industry-to-protest-against-cauvery-issue_secvpfகாவிரி பிரச்சினையில் முதலமைச்சருக்கு ஆதரவாக செயல்படப் போவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ள நிலையில், தற்போது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், தமிழ் திரையுலகை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து தமிழ் திரையுலகின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், கடந்த சில நாட்களாக காவிரி நீர் தமிழக விவசாயிகளுக்கு திறந்து விடப்பட்டிருப்பதை எதிர்த்து, கர்நாடக மாநிலத்தில் நடக்கின்ற வன்முறைகள் எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது.

நாம் எலோரும் பாரத நாட்டின் புதல்வர்கள். இந்திய ஒருமைப்பாட்டை மதித்து நடக்கும் சகோதரர்கள் என்ற கருத்துக்கு சேதம் விளைந்துவிட்டதே என்று வேதனையை அளிக்கின்றது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டுமென்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை உங்களின் சாதாரண மனிதர்கள் புரியாமல் எதிர்ப்பது வேதனையை தருகிறது. எங்களது முதலமைச்சர் கூடங்குளம், நெய்வேலி ஆகிய இடங்களில் இருந்து தமிழ்நாட்டு மின்சாரத்தை கர்நாடகத்திற்கு தாராளமாக அளித்துக் கொண்டிருக்கிறார்.

எங்களது முதல்வர் நல்ல செயல்பாடுகளை முறையோடு செய்பவர். அவர் முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 135 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு பாடுபட்டவர். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசாணை புத்தகத்தில் பதிவு செய்ய வழிவகுத்தவர்.

தமிழக மக்களை அன்போடு அரவணைத்து பாசத்தோடு வழிநடத்துபவர். அவர் வன்முறையை விரும்பாதவர். அதனால்தான் நாங்களும் வன்முறையை நம்பாமல் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது முதல்வரை சில கன்னட அமைப்புகளும், சில கன்னட திரையுலகினரும் அவமதிக்கும் வகையில் பேசியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

முகப்புத்தகத்தில் ஒரு தமிழ் இளைஞன் தெரிவித்த கருத்துக்கு, அவரை 10-க்கும் மேற்பட்ட கன்னட இளைஞர்கள் தாக்குவதை வீடியோ காட்சியில் பதிவு செய்து அதை வெளியிடுவது நம் நல்லுறவுக்கும், நட்புறவுக்கும் உகந்தது இல்லை. எங்களது தமிழ் மக்கள் கர்நாடகத்தில் வாழ்கிறார்கள்.

அதைப்போலவே உங்களது கன்னட மக்களும் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். இந்த சாமானிய மக்களின் வாழ்வாதாரங்கள் ஒரு சிலரின் வெறிச்செயல்களால் பாதிக்கப்படுவதை நாம் அனைவரும் பொறுப்புணர்வோடு ஒன்று சேர்ந்து வன்முறையை தடுக்க வேண்டும். எல்லோரும் பாதுகாப்புடன் வாழவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைய நிகழ்வு நாளைய சரித்திரம். வருங்காலத்தில் நம் சந்ததியினர் புரட்டிப் பார்க்கும்போது… தயவு செய்து இம்மாதிரியான கருப்புப் பக்கங்களை தவிர்ப்போம்… பேச்சுவார்த்தைகள் மூலம், சட்டத்தின் மூலமும், பிரச்சினைக்கு தீர்வு கண்டு அவர்களுக்கு பொன்னான பக்கங்களை விட்டுச் செல்வோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கலைப்புலி தாணு, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் விக்ரமன், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாசர், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் சிவா, மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் சார்பில் டைமண்ட் பாபு, விஜய் முரளி, கிளாமர் சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online