மதனை 6-ந்தேதிக்குள் கைது செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்டு எச்சரிக்கை

201609220901388238_producer-madhan-arrested-till-october-6th-otherwise-heavy_secvpf‘வேந்தர் பிலிம்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் மதன். இவர், கடந்த மே மாதம் முதல் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து அவரை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில், மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பில் இடம் வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பல கோடி ரூபாயை வாங்கி மதன் மோசடி செய்துள்ளதாகவும், இதுகுறித்து பணத்தை இழந்தவர்கள் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மோசடி புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும், காணாமல் போன மதனை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் தனிப்படை அமைக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணனை விசாரணை அதிகாரியாக நியமித்து, அவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார், அவ்வப்போது சென்னை ஐகோர்ட்டில் தங்களது புலன் விசாரணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு கடந்தவாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணாமல் போன மதனை செப்டம்பர் 21-ந் தேதிக்குள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. படஅதிபர் மதனை கைது செய்ய கால அவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. அப்போது அரசு வக்கீல், ‘மதனின் கூட்டாளிகள் இருவர் நேபாளம் நாட்டில் தலைமறைவாகி இருந்து வருகின்றனர். மதன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது’ என்று கூறினார்.

இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘மதனை கைது செய்யவேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை போலீசார் அமல்படுத்தவில்லை. இந்த வழக்கை வருகிற அக்டோபர் 6-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் மதனை கண்டுபிடித்து கைது செய்யவில்லை என்றால் சென்னை போலீஸ் கமிஷனர் மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்வோம். கடும் நடவடிக்கையும் எடுப்போம்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

மேலும், ஆட்கொணர்வு மனுவில் பாரிவேந்தர் மீது மனுதாரர் குற்றம் சுமத்துவதால், அவரது பெயரை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கவேண்டும் என்று கூறி விசாரணையை வருகிற அக்டோபர் 6-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online