MENUMENU

தன்மானக் இசைக்குயில் எஸ்.ஜானகி பாடும் தொழிலுக்கு விடை கொடுத்தார்

201609230914201212_s-janaki-quits-singing-career_secvpfஇந்தியாவின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகியான எஸ்.ஜானகி, 45 ஆயிரத்துக்கும் அதிகமான சினிமா மற்றும் பக்தி பாடல்களை பாடி ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்துள்ளார். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி – சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்த எஸ்.ஜானகி, சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார்.

பின்னர், சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற ’பெண் என் ஆசை பாழானது ஏனோ’ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. “எம்எல்ஏ” என்ற பட்டத்தில் ’நீயாசா அடியார்’ என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.

இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.

நாதஸ்வரத்துக்கு போட்டியாக ‘சிங்கார வேலனே.., வேலா’ பாடலும், குங்குமம் படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’ உள்ளிட்ட எண்ணற்றப் பாடல்கள் இவரது தனித்துவம் மிக்க குரலை உலகறியச் செய்தது.

’பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்’, ’இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்’, ’காலத்தை வென்றவன் நீ – காவியமானவன் நீ’, மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன்’, ’காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி’ ‘மச்சானைப் பாத்தீங்களா’, ’செந்தூரப்பூவே, செந்தூரப்பூவே என் மன்னன் எங்கே’ போன்ற மனதை மயக்கும் இசையமைப்பில் உருவான பாடல்களுடன், ’நேத்து ராத்திரி யம்மா’, ‘வாழ வைக்கும் காதலுக்கு ஜே’, ‘இஞ்சி இடுப்பழகா’ போன்ற காதல்ரசம் சொட்டும் பல பாடல்கள் இவரது பாடும்பாணிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

மவுன கீதங்கள் படத்தில் வரும் ‘டாடி டாடி, ஓமை டாடி’, ருசிகண்ட பூனை படத்தில் இடம்பெற்ற ‘கண்ணா நீ எங்கே’, மற்றும் பந்தம் என்ற சிவாஜி கணேசன் படத்தில் பேபி ஷாலினிக்காக ‘அங்கிள், அங்கிள் பிக்கு அங்கிள் யானை கதை ஜோருதான்’ என மழலைக் குரலிலும் பாடி மகிழ்வித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன்முதலில் இசையமைத்துள்ளார்.

தனது கணவர் ராம் பிரசாத் காலஞ்சென்ற பின்னர் மகன் முரளி கிருஷ்ணாவுடன் எஸ்.ஜானகி சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

சுமார் 60 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றிய எஸ்.ஜானகி, நான்கு முறை தேசிய விருதுகளையும், 32 முறை தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றவர். கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ‘பத்மபூஷன்’ விருதை ‘காலம் கடந்த அங்கீகாரம்’ என்றுகூடி, புறக்கணித்த எஸ்.ஜானகி, ‘இனி ஒலிப்பதிவிலோ, மேடை கச்சேரிகளிலோ பாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

சமீபத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் ’அம்மா அம்மா’ ௭ன்ற பாடலையும் திருநாள் திரைப்படத்தில் ’தந்தையும் யாரோ தாயாரும் யாரோ’ பாடலைப் பாடியுள்ளார். இதன் பின்னர், பாடும் தொழிலில் இருந்து ஓய்வுப்பெற வேண்டும் என எஸ்.ஜானகி ஆலோசித்து வந்தார்.

அப்போது, எஸ்.ஜானகியின் திரையுலக சாதனையை கொண்டாட கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற ஒரு விழாவில் அவரை சந்தித்த இசையமைப்பாளர் மிதுன் ஈஷ்வர் மற்றும் இயக்குனர் டான் மேக்ஸ் ஆகியோர் தங்களது படத்துக்காக ஒருபாடலை பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதற்கு ஜானகியும் சம்மதித்தார்.

கடந்தமாதம் ஐதரபாத்தில் உள்ள ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் ’அம்மாப்பூவினு’ என்ற மலையாளப் படத்துக்காக ஒரு தாலாட்டுப் பாடலை, மனமகிழ்ச்சியுடன் உருக்கமாக பாடிய ஜானகி, ஒலிப்பதிவு முடிந்ததும் ’இதுதான் எனது கடைசிப் பாடல்’ என்று திடீரென அறிவித்தார்.

தனது இந்த திடீர் முடிவு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள எஸ்.ஜானகி(78), ’நான் பல மொழிகளில் பாடி விட்டேன். இப்போது வயதாகி வருவதால் பாடும் தொழிலில் இருந்து ஓய்வெடுக்க விரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

தனது கடைசி ஒலிப்பதிவுக்கு பின்னர் ரசிகர்களிடம் இருந்து பிரியாவிடைப் பெறும் எஸ்.ஜானகியின் பேட்டியைக் காண..,

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online