படப்பிடிப்புக்கு வந்த ரஜினிகாந்தை சூழ்ந்த ரசிகர்கள்

201610051016180954_rajinikanth-fans-surrounded-the-shooting-spot_secvpfரஜினிகாந்த் நடித்து ஏற்கனவே வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். இதில் கதாநாயகியாக எமிஜாக்சனும் வில்லன் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடிக்கிறார்கள். ரூ.350 கோடி செலவில் இந்த படம் உருவாகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் விளையாட்டு போட்டிகள் நடப்பது போன்றும் அதில் அக்‌ஷய்குமார் ஆக்ரோஷமாக தோன்றுவது போன்றும் காட்சிகளை படமாக்கினர்.

அதன் பிறகு ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் இரண்டு மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மற்ற நடிகர்-நடிகைகளுக்கான காட்சிகள் மட்டும் படமாகி வந்தன. 50 சதவீதம் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதாக டைரக்டர் ஷங்கர் தெரிவித்தார்.

பல மாதங்கள் ஓய்வுக்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது பூரணமாக குணமடைந்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து ‘2.0’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை ஷங்கர் மீண்டும் தொடங்கி உள்ளார்.

திருக்கழுக்குன்றத்தில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் திருக்கழுக்குன்றம் சென்றார். அவர் வரும் தகவல் அறிந்ததும் ரசிகர்களும் பொதுமக்களும் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் திரண்டார்கள். ரஜினி காரில் இருந்து இறங்கியதும் அவரை சூழ்ந்து கொண்டு கைகுலுக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் நெருங்கினார்கள்.

இதனால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரஜினிகாந்தால் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு செல்ல முடியவில்லை. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

அவர்கள் கூட்டத்தினரை அப்புறப்படுத்தி ரஜினிகாந்தை அரங்குக்குள் அனுப்பி வைத்தனர். பின்னர் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியும் கதாநாயகி எமிஜாக்சனுடன் ஆடிப்பாடுவது போன்ற டூயட் பாடல் காட்சியும் படமாக்கப்பட்டன.

படப்பிடிப்பு காட்சிகளை திருட்டுத்தனமாக செல்போனில் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிடுவதை தடுக்க படப்பிடிப்பு நடந்த பகுதியை சுற்றிலும் தனியார் பாதுகாவலர்களை கொண்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

செல்போன்கள், கேமராக்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அடையாள அட்டை வைத்துள்ள படக்குழுவினர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

திருக்கழுக்குன்றத்தில் படப்பிடிப்பு முடிவடைந்ததும் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். இதற்காக அங்கு பல கோடி செலவில் சென்னை நகரம் அரங்குகளாக அமைக்கப்பட்டு உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online