MENUMENU

தேவி – திரை விமர்சனம்

devil-movie-poster-10143மாடர்ன் பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் பிரபுதேவா, பாட்டியின் விருப்பத்தின் பேரில் கிராமத்து பெண்ணான தமன்னாவை திருமணம் செய்ய நேரிடுகிறது. திருமணத்திற்கு பிறகு அவளை மும்பைக்கு அழைத்து செல்லும் பிரபுதேவா, அவளை எப்படியாவது பேசி கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், பிரபுதேவா அலுவலகத்தில் உள்ளவர்கள் இவர்களுக்கு ஒரு பார்ட்டி வைக்கிறார்கள். அந்த பார்ட்டிக்கு தமன்னாவும் வருவேன் என்று அடம்பிடிக்க, பிரபுதேவா அவரையும் கூட்டிச் செல்கிறார். சென்ற இடத்தில் தமன்னா மாடர்ன் உடை அணிந்து பயங்கரமான நடனம் ஒன்றை ஆடுகிறார். மேலும், சரளமாக ஆங்கிலமும் பேசுகிறார்.

இதையெல்லாம் பார்த்து அதிர்ந்துபோன பிரபுதேவா, அவளை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வருகிறார். மறுநாள் எழுந்து பார்க்கும்போது முந்தைய நாள் நடந்தது எதுவுமே தமன்னாவுக்கு தெரிவதில்லை. அவள் உடம்பில் ஏதோ ஆவி புகுந்திருக்கலாம் என்று பயப்படும் பிரபுதேவா, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அந்த வீட்டில் ஏற்கெனவே தங்கியிருந்தவர்கள் பற்றி விசாரிக்கிறார்.

அப்போது சினிமாவில் பெரிய நடிகையாக ஆசைப்பட்டு பாதியிலேயே இறந்துபோன ரூபி என்ற பெண்ணின் ஆவி அந்த வீட்டில் இருப்பதும், அது தமன்னாவின் உடம்பில் புகுந்துள்ளதும் தெரிய வருகிறது. ஆவியை விரட்ட பல முயற்சிகள் செய்தும் பிரபுதேவாவால் முடியவில்லை.

இதனால், ஆவியிடம் சமரசமாக பேசி, அந்த ஆவியிடம் 5 கண்டிஷன்களுடன் கூடிய அக்ரிமெண்ட் போடுகிறார். அந்த அக்ரிமெண்ட் படி நடந்தால் ரூபியின் ஆசையை நிறைவேற்ற பிரபுதேவா ஒத்துழைப்பதாக கூறுகிறார். மேலும், ஒப்பந்தம் முடிந்தபிறகு தமன்னாவின் உடம்பில் இருந்து ரூபி வெளியே சென்றுவிட வேண்டும் என்று கூறுகிறார்.

பிரபுதேவா ஒப்பந்தப்படி ரூபியின் ஆவி நடந்துகொண்டதா? தமன்னாவின் உடம்பில் இருந்து ரூபியின் ஆவி வெளியே சென்றதா? என்பதே மீதிக்கதை.

பிரபுதேவா இப்படத்தில் ரொம்பவும் இளமையாக தெரிகிறார். நடிப்பிலும் எதார்த்ததை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆவியை கண்டு பயப்படும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் சேர்ந்து பயமுறுத்துகிறார். அதேபோல், அவருக்கே உரித்தான காமெடித்தனம் இந்த படத்திலும் தனியாக பளிச்சிடுகிறது. வித்தியாசமான நடனத்திலும் அசர வைத்திருக்கிறார்.

தமன்னா இரு வேறு கெட்டப்புகளில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்து பெண்ணாக, அப்பாவி முகத்துடன் வலம் வரும் காட்சிகளில் எல்லாம் நெகிழ வைத்திருக்கிறார். அதேபோல், மாடர்ன் உடையில், ஸ்டைலாக நடனம் ஆடும் காட்சிகளில் எல்லாம் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி ரசிக்க வைக்கிறது. சதிஷின் வித்தியாசமான தலைமுடி, உடைகள் எல்லாம் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கிறது. நாசர் சில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார்.

ரூபியின் மேனேஜராக வரும் முரளி ஷர்மாவும் நடிப்பில் மிரட்டுகிறார். அதேபோல், நடிகராக வரும் சோனு சூட், தோற்றத்திலேயே மிரட்டுகிறார். எமி ஜாக்சன் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியிருக்கிறார்.

ஏ.எல்.விஜய் வித்தியாசமான ஒரு பேய் கதையை படமாக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் கோரமான பேய்களை பார்த்து வெறுத்துப்போனவர்களுக்கு இந்த படத்தில் அழகான, கிளாமரான பேயை கொண்டுவந்து ரசிகர்களை கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். படத்தில் கதாபாத்திரங்கள் தேர்வு எல்லாம் சிறப்பாக இருக்கிறது. திரைக்கதையும் விறுவிறுப்பாக செல்கிறது.

ஷாஜித் – வாஜித் – விஷால் மிஷ்ரா ஆகியோரின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. கோபி சந்தரின் பின்னணி இசை மிரட்டல். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘தேவி’ திகில் தேவி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online