சூர்யாவுடனான திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘36 வயதினிலே’ என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்து வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் தமிழ் பதிப்பாக இப்படம் வெளியானது. இந்த படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது.
இதைத்தொடர்ந்து அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஜோதிகா மீண்டும் கதை கேட்டு வந்தார். டைரக்டர் பிரம்மா சொன்ன கதை அவருக்கு பிடித்தது. பிரம்மா ‘குற்றம் கடிதல்’ என்ற படத்தை இயக்கி பிரபலமானவர். பள்ளி குழந்தைகளிடம் ஆசிரியர்கள் கடுமையாக நடந்துகொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி அந்த படத்தை அவர் எடுத்து இருந்தார்.
தற்போது ஜோதிகாவை கதாநாயகியாக வைத்து அவர் இயக்கி வரும் புதிய படத்துக்கு ‘மகளிர் மட்டும்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதே தலைப்பில் கமல்ஹாசன் தயாரித்த படம் 1994-ம் ஆண்டு வெளிவந்தது. கமல்ஹாசன் இந்த தலைப்பை ஜோதிகா படத்துக்கு பயன்படுத்த அனுமதி வழங்கி இருக்கிறார். இதற்காக அவருக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து உள்ளார்.
‘மகளிர் மட்டும்’ படத்தில் ஜோதிகாவுடன் நாசர், லிவிங்ஸ்டன், பானுப்பிரியா, சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். இதில் ஜோதிகா ஆவணப்பட இயக்குனர் கதாபாத்திரத்தில் வருகிறார்.
முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.