MENUMENU

கொடி – திரை விமர்சனம்

dhanush-story_647_092816071847காது கேட்காத, வாய் பேசமுடியாத கருணாஸுக்கு அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை. ஆனால், அவருடைய ஊனத்தால் அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. தன்னால் முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் கருணாஸுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒரு குழந்தையை அரசியலில் களமிறக்க திட்டமிடுகிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியில் இருக்கும் கருணாஸ், ஒருமுறை விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் தீக்குளித்து இறந்து போகிறார். சிறிய வயதிலிருந்தே அப்பாவுடன் கட்சி அலுவலகத்துக்கு சென்றுவரும் மூத்த மகன் தனுஷ் பெரியவனான பிறகு தனது அப்பாவின் ஆசைக்காக கருணாஸ் இருந்த கட்சியிலேயே சேருகிறார். இளைய தனுஷ் கல்லூரி பேராசிரியராக ஆகிறார்.

இளம் வயதிலிருந்தே எதிர்கட்சியில் இருக்கும் திரிஷா மீது அரசியல்வாதி தனுஷுக்கு காதல். எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும், இவர்கள் இரண்டு பேரும் காதலர்களாக வலம் வருகிறார்கள். அதேவேளையில், கல்லூரி பேராசிரியரான மற்றொரு தனுஷ், லெக்கான் கோழி முட்டையை டீத்தூளில் நனைத்து நாட்டுக் கோழி முட்டை என்று விற்று வரும் அனுபமா பரமேஸ்வனை காதலிக்கிறார்.

அவள் ஏன்? அப்படி ஏமாற்றி விற்கிறார் என்று தனுஷ் கேட்கையில், தனது ஏரியாவில் இருக்கும் விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நிறைய பணம் தேவைப்படுவதால் அதற்காகத்தான் இந்த மாதிரியான ஏமாற்று வேலையை செய்து வருவதாக அனுபமா கூறுகிறார். இதைக் கேட்கும் தனுஷ், தனது அண்ணான அரசியல்வாதி தனுஷிடம் இதைப்பற்றி சொல்கிறார்.

அந்த தொழிற்சாலையை மூடுவதற்காகத்தானே எனது அப்பா உயிரை விட்டார். அப்படியிருக்கையில் அந்த தொழிற்சாலையில் இருந்து எப்படி விஷவாயு வெளியே வருகிறது என்பது குறித்து கட்சி தலைமையிடம் சென்று நியாயம் கேட்கிறார் அரசியல்வாதி தனுஷ்.

ஆனால், கட்சி தலைமையோ, பல கோடிகளை லஞ்சமாக வாங்கிக் கொண்டு அந்த தொழிற்சாலையில் உள்ள விஷவாயுக்களை அப்புறப்படுத்தாமல் விட்டதற்கு உடந்தையாக இருப்பது தனுஷுக்கு தெரிய வருகிறது.

இடைத் தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தனுஷை எஸ்.ஏ.சந்திரசேகர் சமாதானப்படுத்துகிறார். வருகிற தேர்தலில் தனுஷுக்கு பதவி கொடுப்பதாகவும், அந்த பதவியை வைத்து அந்த தொழிற்சாலையில் உள்ள விஷவாயுக்களை அப்புறப்படுத்துமாறும் கூறுகிறார்.

ஆனால், அதுவரை பொறுத்துக்கொள்ள முடியாத தனுஷ் இந்த விஷயத்தை எதிர்க்கட்சியை சேர்ந்த தனது காதலி திரிஷாவிடம் சென்று கூறி மனவேதனைப்படுகிறார். ஆனால், அரசியல் வேறு, காதல் வேறு என்று இருக்கும் திரிஷாவோ இந்த விஷயத்தை பொது மேடையில் போட்டு உடைக்கிறார். இதனால் கட்சி தலைமைக்கு தனுஷ் மீது கோபம் ஏற்படுகிறது.

இந்நிலையில், இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்களை கட்சி தலைமை அறிவிக்கிறது. அப்போது தனுஷின் பெயரும் அந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுகிறது. அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் தனது காதலி திரிஷாவை எதிர்த்து போட்டியிடுகிறார். அதேநேரத்தில், பேராசிரியர் தனுஷை கொலை செய்வதற்கு ரவுடி கும்பல் ஒன்று கிளம்புகிறது.

இறுதியில், கோபம் கொண்ட கட்சி தலைமை தனுஷுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்ததன் காரணம் என்ன? தனது காதலியை எதிர்த்து தனுஷ் வென்று விஷவாயு தொழிற்சாலையை அப்புறப்படுத்தினாரா? தம்பியை கொலைசெய்ய கிளம்பும் கொலை கும்பலை ஏவிவிட்டது யார்? தனது தம்பியை அரசியல்வாதி தனுஷ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

தனுஷ் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வெவ்வேறு விதமான நடிப்பையும், தனது உடல்மொழியையும் மாற்றி நடித்திருக்கிறார். அரசியல்வாதி கெட்டப்பில் ரொம்பவும் ‘மாஸாக’ தெரிகிறார்.

அப்பாவியான கெட்டப்பில் தனக்கே உரிய சாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன், ரொமான்ஸ் என இரண்டிலும் அவரது தனித்தன்மை இந்த படத்திலும் பளிச்சிடுகிறது.

அரசியல்வாதி தனுஷின் காதலியாக வரும் திரிஷாவுக்கு இப்படத்தில் பலமான கதாபாத்திரம். மேடைப் பேச்சாளராக தனது நடிப்பை ரொம்பவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அரசியலில் பெரிய இடத்துக்கு வரவேண்டுமானால் எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் துணிச்சலான பாத்திரத்தை அலட்டாமல் செய்து பளிச்சிடுகிறார்.

படத்தில் பேசவைக்கக்கூடிய மற்றொரு கதாபாத்திரம் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். ஒரு அரசியல்வாதிக்கே உரிய மிடுக்கு இவரிடம் அதிகமாகவே தோன்றுகிறது. அதேநேரத்தில், ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் மிகவும் மென்மையான அரசியல்வாதியாக மனதில் அழகாக பதிந்திருக்கிறார். மற்றொரு நாயகியான அனுபமா பரமேஸ்வரன் பார்க்க அழகாவும், நடிப்பில் மென்மையும் கலந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

தனுஷின் அப்பாவாக வரும் கருணாஸ் ஆரம்பத்தில் ஒருசில காட்சிகளே வந்தாலும், காது கேட்காத, வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இவருடைய மனைவியாக வரும் சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை எடுத்த துரை.செந்தில்குமார் தனது முந்தைய படங்களைவிட முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை எடுத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்விலேயே முதல் வெற்றியடைந்துவிட்டார். மற்றபடி, அவர்களை நன்றாக வேலைவாங்கி இந்த படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்.

அரசியல் பற்றிய கதை என்றாலும், பிரச்சினைக்குள் ஆழமாக செல்லமால் தன்னுடைய எல்லை எதுவரை? என்பதை புரிந்துகொண்டு அதை நேர்த்தியாக செய்திருக்கிறார். திரைக்கதை விறுவிறுப்பாக செல்வது ரசிகர்களை இருக்கையை விட்டு எழுந்திருக்க விடாமல் செய்கிறது. மேலும், வசனங்களும் படத்திற்கு பக்கதுணையாக நிற்கிறது.

வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்தை சுவாரஸ்யமாக கொண்டுசெல்ல உதவியிருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது. ‘ஏய் சுழலி’ பாடல் கேட்பதற்கு மட்டுமில்லாமல் காட்சியப்படுத்திய விதமும் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் வழக்கம்போல மிரட்டியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘கொடி’ வெற்றிக்கொடி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online