MENUMENU

அதிரடி முடிவை அறிவித்திருக்கின்ற பிரதமர் பாராட்டுக்குரியவர்: தங்கர்பச்சான்

201611111204338098_prime-minister-modi-decision-to-be-commended-thangar-bachan_secvpfதிரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

500, 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் யாருக்குத்தான் பாதிப்பு இல்லை. நாட்டின் எதிர்காலம் குறித்து இந்த அவதிகளை சில நாட்களுக்கு நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

மக்களின் சொத்துகளையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடிப்பவர்களை ஆதரித்து அவர்களிடத்திலேயே மண்டியிட்டு கிடப்பவர்கள்தான் நாம். நமக்கெதிரான எது குறித்தும் வீதிக்கு வந்துப் போராடும் துணிவு நமக்கு எப்போதுமே இருந்ததில்லை. நம்முடைய போராட்டமெல்லாம் வலைத்தளத்திற்குள்தான்.

நாம் செய்ய முடியாததை அரசாங்கம் செய்திருக்கிறது. இத்திட்டத்தில் பலவீனங்கள் இருந்தாலும் பலன்களே அதிகம் என்பதை உணர வேண்டும். கருப்பு பணத்தால் நம்மை ஆட்டிப்படைத்து விலைவாசியை ஏற்றி நம்மை கொடுமைப்படுத்துபவர்கள் இதற்கும் ஒரு குறுக்கு வழியை தேடிக்கொண்டிருப்பார்கள் பெரிய திருடர்களெல்லாம் ஏற்கனவே அயல்நாடுகளில் கொண்டுபோய் பதுக்கிக்கொண்டார்கள்.

மீதியை பல திருட்டு வழிகளையும் கையாண்டு தங்கமாகவும், வெள்ளையாகவும் மாற்றி விடுவார்கள். அதற்கடுத்த நிலையில் இருக்கும் திருடர்கள் செல்லாத தாள் கட்டுகளை எரிப்பதா, தூக்கிப்போடுவதா என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு இன்னொரு கடைசி வாய்ப்பை அளித்து பாதிக்குப்பாதி வரி செலுத்தி பிழைத்து செல்லுங்கள் என அரசு அறிவிக்கலாம்.

அவ்வாறு செய்தால் கருப்பு வெள்ளையாக மாறும்! அந்தப்பணமெல்லாம் புழக்கத்திற்கு வந்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

பொருளாதார முன்னேற்றத்தைப்பற்றி சிந்தித்து இப்படியொரு அதிரடி முடிவை அறிவித்திருக்கின்ற பிரதமர் பாராட்டுக்குரியவர்தான் என்றாலும் உடனடியாக, ஏற்கனவே வாக்குறுதி தந்தபடி வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு அந்தத் திருடர்களை எல்லாம் மக்களிடத்தில் அம்பலப்படுத்தி, பணத்தை மீட்டுக்கொண்டு வர வேண்டும். அத்துடன் மக்களையும், அரசாங்கத்தையும் ஏமாற்றியதற்காக கடும் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்.

அதைத்தான் ஒரு தவறும் செய்யாமல் அல்லாடிக்கொண்டிருக்கும் இந்த மக்கள் விரும்புகிறார்கள். அதை செய்யவேண்டியது பிரதமரது கடமை.

அதிலிருந்து நழுவினாலோ, தள்ளிப்போட்டாலோ இந்த பொருளாதார மேம்பாட்டுத்திட்டம் முழுமையான பலனைத்தராது. அதற்கு பதிலாக மக்களிடத்தில் இத்திட்டம் அவர்மீது வெறுப்பையும், அவருக்கு களங்கத்தையுமே தேடித்தரும்.

குடிமக்களாகிய நாம் இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பை தருவது மட்டுமே! கையில் கணினி இருக்கிறது என்பதற்காக நகைச்சுவை என்கிற பேரில் கருத்துப்படங்களையும், மலினமான கருத்துகளையும் வெளியிட்டும், ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டும் இத்திட்டத்தையும், பிரதமரையும் கேலிப்படுத்துவதல்ல.

அதற்கு பதிலாக, அயல்நாடுகளில் பதுக்கியிருக்கும் கள்ளப் பணத்தை மீட்டுக்கொண்டு வர பிரதமரை அனைத்து மக்களும் சேர்ந்து போராடி வற்புறுத்த வேண்டும். அது நடக்காமல் நாம் எதை பேசினாலும் பாதிக்கப்படப்போவது நாம்தான்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online