MENUMENU

அச்சம் என்பது மடமையடா – திரை விமர்சனம்

acham-enbathu-madamaiyada-movie-poster_144101923200சிம்பு படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய தங்கையின் தோழி நாயகி மஞ்சிமா மோகன். விஸ்காம் படித்துவரும் மஞ்சிமா மோகன் புராஜெக்ட் விஷயமாக சிம்புவின் வீட்டில் தங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது வீட்டுக்கு வரும் மஞ்சிமா மோகனை பார்த்தவுடனே அவள் மீது காதல்வயப்பட்டு விடுகிறார் சிம்பு.

மஞ்சிமாவுடன் நெருங்கி பழகி நட்பாகிறார். அப்போது, சிம்பு ஏன் வேலைக்கு போகவில்லை என்று மஞ்சிமா கேட்கிறார். அதற்கு சிம்பு, பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிய பிறகுதான் வேலைக்கு செல்லப்போவதாக கூறுகிறார்.

அதன்பிறகு, மஞ்சிமா மோகனும் தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மஞ்சிமாவுக்கும் சிம்புவைப் போன்றே நீண்ட தூரம் பைக்கில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தும், இதுவரை பைக்கில் பயணித்ததே கிடையாது என்பதால் சிம்புவையும் கூட அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார்.

அதன்படி, இருவரும் சேர்ந்து பைக்கில் மகாராஷ்டிரா நோக்கி பயணமாகிறார்கள். மகாராஷ்டிரா நெருங்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக இவர்களது பைக் விபத்துக்குள்ளாகிறது. அடிபட்டு கிடக்கும் சமயத்தில் தான் இறந்துவிடுவோமோ என்ற பயத்துல சிம்பு தன்னோட காதலை மஞ்சிமாவிடம் சொல்கிறார்.

அதன்பிறகு, சிம்பு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்விழித்து பார்க்கும்போது மஞ்சிமா மோகனை காணவில்லை. அப்போது அவருக்கு ஒரு போன் வருகிறது. அப்போதுதான் சிம்புவுக்கு மஞ்சிமா மோகன் அங்கிருந்து சென்றதற்கான காரணமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்சினை குறித்து தெரிய வருகிறது.

அதன்பிறகு சிம்பு, மஞ்சிமா மோகனை தேடிக் கண்டுபிடித்து அவளது பிரச்சினைக்கு தீர்வு கண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஒரு சாதாரணமான இளைஞனின் வாழ்க்கையில் வன்முறை நுழையும்போது, அந்த வன்முறை அவனது வாழ்க்கையை எப்படி திருப்பிப் போடுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். படத்திற்கு மிகப்பெரிய பலமே சிம்புதான்.

அவர் பேசும் வசனங்கள் ஆகட்டும், முகத்தில் கொடுக்கிற சின்ன சின்ன முகபாவனைகளாகட்டும் எல்லாமே ரொம்பவும் அழகாக இருக்கிறது. இந்த கதையில் சிம்புவை தவிர வேறு யாரையும் வைத்துப் பார்க்கமுடியவில்லை. அந்தளவுக்கு கதைக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சிம்பு.

மஞ்சிமா மோகன் ஆரம்பத்தில் சிம்புவுடன் நெருங்கி பழகும் காட்சிகளிலும், பிற்பாதியில் குடும்ப செண்டிமெண்டில் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கவுதம் மேனன் படங்களில் கதாநாயகியை ரொம்பவும் அழகாக காட்டியிருப்பார். அதேபோல், இந்த படத்திலும் மஞ்சிமா மோகனை ரொம்பவும் அழகாகவே காட்டியிருக்கிறார்.

போலீசாக வரும் பாபா சேகலை பெரிய வில்லனாக பார்க்கமுடியவில்லை. அவருடைய கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். அதேபோல், டேனியல் பாலாஜியின் கதாபாத்திரத்திற்கு வலுவில்லாதது மிகப்பெரிய ஏமாற்றம். சிம்புவின் நண்பனாக வரும் டான்ஸர் சதீஷ் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு கவுதம் மேனனுடன் சிம்பு இணைந்து வெளிவந்திருக்கும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பையெல்லாம் படம் கண்டிப்பாக பூர்த்தி செய்திருக்கிறது எனலாம்.

படத்தின் முதல் பாதியிலேயே எல்லா பாடல்களும் வந்துவிடுகிறது. அப்போதே பிற்பாதி ஆக்ஷன் காட்சிகள்தான் வரப்போகிறது என்பது தெரிந்துவிடுகிறது. அதேபோல், பிற்பாதி முழுக்க ஆக்சன் காட்சிகளே வருகிறது.

படத்தின் இறுதிவரை சிம்புவின் பெயரையே சொல்லாமல் சுவாரஸ்யமாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர். இறுதியில், அந்த பெயரை சொல்லும்போது தியேட்டரே கைதட்டலில் அலறுவது சிறப்பு.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பிற்பாதி திருப்தியைக் கொடுக்கவில்லை என்பதுதான் பெரிய ஏமாற்றமே. அதேபோல், கிளைமாக்ஸ் காட்சி சிம்பு ரசிகர்களை திருப்திபடுத்தும் என்றாலும், சாதாரண மக்களுக்கு ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தில் விஷுவலாக பார்க்கும்போதும் நன்றாக இருக்கிறது. 10 நிமிட இடைவெளிக்கு ஒரு பாடல் வந்தாலும், ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

‘சோக்காலி’ பாடலை திரையில் பார்ப்பவர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் இயக்குனர். பெரிதும் எதிர்பார்த்த ‘தள்ளிப்போகாதே’ பாடல் எடுக்கப்பட்ட விதம் மிகவும் அருமை. ரசிகர்களுக்கு இந்த பாடல் முழு திருப்தியை கொடுத்திருக்கிறது எனலாம்.

டானின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இல்லாம் இவரது கேமரா பளிச்சிடுகிறது. காட்சிகளையும் ரொம்பவும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ அச்சமில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online