MENUMENU

கடவுள் இருக்கான் குமாரு – திரை விமர்சனம்

kadavul-irukan-kumaru-movie-first-look-2ஜி.வி.பிரகாஷுக்கும் நிக்கி கல்ராணிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெகிறது. திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடுவதற்காக பாண்டிச்சேரி வரை செல்வதற்கு நிக்கி கல்ராணியின் காரை வாங்கிக் கொண்டு செல்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

பாண்டிச்சேரியில் பார்ட்டி கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் வழியில், போலீஸ் அதிகாரிகளான பிரகாஷ் ராஜ், சிங்கம்புலி, ரோபோ சங்கர் ஆகியோர் இவர்களது காரை வழிமறித்து சோதனை செய்கிறார்கள்.

அவர்களது காரில் மதுபாட்டில்கள் இருப்பதை பார்த்ததும், அவர்களை கைது செய்யப்போவதாக பிரகாஷ் ராஜ் மிரட்டுகிறார். உடனே பயந்துபோன ஜி.வி.யும், பாலாஜியும் அவர்களிடம் இருந்து தப்பித்து செல்கிறார்கள். ஆனால், பாலாஜியின் மொபைல் சிங்கம் புலியிடம் சிக்குகிறது. அதைவைத்து பிரகாஷ் ராஜ் அவர்களை பின்தொடருகிறார்.

இதற்கிடையில், ஜி.வி.யின் முன்னாள் காதலியான ஆனந்தியும், திருமணம் செய்து கொள்ளப்போகும் நிக்கி கல்ராணியும் அவருக்கு தொடர்ந்து போன் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆனந்தி ஜி.வி.யின் மீது பாசமாகவும், நிக்கி கல்ராணி ரொம்ப கண்டிஷனாகவும் நடந்து கொள்கிறார்.

ஒருகட்டத்தில் ஜி.வி.பிரகாஷின் மனதில் சிறிய மாற்றம் ஏற்படுகிறது. நிக்கி கல்ராணியை திருமணம் செய்யலாமா? ஆனந்தியை திருமணம் செய்யலாமா? என்ற குழப்பமும் ஏற்படுகிறது. இறுதியில், ஜி.வி.யும், பாலாஜியும் பிரகாஷ் ராஜிடம் இருந்து தப்பித்தார்களா? ஜி.வி. யாரை திருமணம் செய்தார்? என்பதே மீதிக்கதை.

ஜி.வி.பிரகாஷ் வழக்கம்போல் நண்பர்களோடு அரட்டையடிப்பது, நாயகிகளுடன் இணைந்து டூயட் ஆடுவது என்பது இல்லாமல் இப்படத்தில் கொஞ்சம் நன்றாகவே நடித்திருக்கிறார்.

நீண்ட வசனங்களைக்கூட அசால்ட்டாக பேசி அசர வைக்கிறார். நிக்கி கல்ராணி, ஆனந்தி என இரு கதாநாயகிகளுடன் நெருங்கி நடிப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாமல் தாராளமாக நடித்திருக்கிறார். அவர்களும் ஜி.வி.பிரகாஷுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு படம் ஆனந்தி மெருகேறிக் கொண்டே வருகிறார். நிக்கி கல்ராணியும் பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, ராஜேஷ் படத்தில் சந்தானம் இல்லாத குறையை நீக்கியிருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் ரசிகர்களின் கரவொலி காதை பிளக்கிறது.

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் பிரகாஷ் ராஜ். காமெடி கலந்த வில்லத்தனத்தில் கலக்கியிருக்கிறார். ரொம்பவும் எதார்த்தமான நடிப்பில் அசர வைக்கிறார். அவருக்கு ரோபோ சங்கரும், சிங்கம் புலியும் கைகொடுத்து உதவியிருக்கிறார்கள். பேசுவதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தும் ஊர்வசியும், அந்த நிகழ்ச்சியை நடத்தும் இயக்குனராக வரும் மனோபாலாவும் நகைச்சுவையில் வயிறு குலுங்க வைத்திருக்கிறார்கள்.

எம்.எஸ்.பாஸ்கர் கண்டிப்பான அப்பாவாக வந்து மிளிர்கிறார். அதிகார தோரணையுடன் இவர் பேசும் வசனங்கள் எல்லாமே ரசிக்க வைக்கிறது. ஜி.வி.யின் அப்பாவாக வரும் டி.சிவாவும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

இயக்குனர் எம்.ராஜேஷ் வழக்கம்போல காமெடி கலந்த ஒரு படத்தையே கொடுத்திருக்கிறார். முந்தைய படங்களின் சாயல் இருந்தாலும் படத்தை ரசிக்கும்படி எடுத்திருப்பது சிறப்பு.

ராஜேஷ் படங்கள் என்றாலே வயிறு குலுங்கு சிரித்துவிட்டு வரலாம் என்பதற்கு இந்த படமும் கியாரண்டி. முதல்பாதி கலகலப்பாக சென்றாலும், இரண்டாம் பாதியில் பாடல் காட்சிகளை புகுத்தி ஊர் சுற்றி முடித்திருப்பது ஏனோ சற்று சலிப்பை தருகிறது. அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

ஜி.வி.யின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் அடித்துள்ளது. திரையில் அதை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அதிரடியாக இருக்கிறது. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு காட்சிகளை மிகவும் அழகாக படம்பிடித்திருக்கிறார். சேசிங் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ காமெடியில் கலக்குகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online