MENUMENU

பறந்து செல்ல வா – திரை விமர்சனம்

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி செல்கிறார் நாயகன் லுத்புதீன் பாட்ஷா. அங்கு நண்பன் சதீஷ், ஆனந்தி ஆகியோருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்து வேலை தேடி வருகிறார். எந்த பெண்ணை பார்த்தாலும் உடனே காதல்வயப்படும் லுத்புதீன், அந்த பெண்ணிடம் சென்று தன்னை காதலிக்குமாறு கேட்பது வழக்கம்.

இதனால், இவருடன் தங்கியிருக்கும் பெண்கள் இவரை எப்போதும் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால், தான் யாரையாவது காதலிப்பதுபோல் அவர்களிடம் காட்டி வாயை அடைக்க முடிவு செய்கிறார். இதற்காக, வழியில் கிடக்கும் பேப்பரில் அவர் பார்த்த நார்லே கேங்க்கை தனது ஜோடியாக தேர்வு செய்கிறார்.

பின்னர் ஆர்.ஜே.பாலாஜியின் ஆலோசனையை கேட்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, அந்த பெண்ணின் பெயரில் போலி பேஸ்புக் பக்கத்தை ஒன்றை உருவாக்கி, அதில் லுத்புதீனும், நார்லேவும் சேர்ந்து இருப்பதுபோல் புகைப்படங்களை உருவாக்கி பதிவு செய்கிறார். இதையெல்லாம் பார்த்த லுத்புதீனின் தோழிகள் இதை உண்மையென்றே நம்புகிறார்கள்.

இதற்கிடையில், லுத்புதீனுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுக்கின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷின் அவரது செல்போன் எண்ணை லுத்புதீனுக்கு அனுப்பி வைக்கிறார்கள். லுத்புதீனும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேசியதும் அவளது குரல் பிடித்துப்போக, அவருடன் பழக ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில், தனது பெயரில் போலி பேஸ்புக் பக்கத்தை தொடங்கி தன்னை ஏமாற்றிவரும் லுத்புதீனை தேடி புறப்படுகிறாள் நார்லே. அவனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனை காதலிப்பதாக கூறுகிறாள். ஆனால், லுத்புதீனோ அந்த காதலை ஏற்க மறுக்கிறார்.

இறுதியில், லுத்புதீன் பெற்றோர் பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷை கரம்பிடித்தாரா? தன்னை காதலிப்பதாக கூறும் நார்லேவை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

சைவம், இது என்ன மாயம் என்ற ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்த லுத்புதீன் இதில் முழு நீள கதாநாயகனாக மாறியிருக்கிறார். மாடர்ன் உடைகளில் கதாநாயகனுக்குண்டான தோற்றத்தை வெளிப்படுத்தினாலும், நடிப்பில் இன்னும் கொஞ்சம் தேற வேண்டும். ரொமான்ஸ் காட்சிகளில் நெருங்கி நடிக்க கொஞ்சம் தயங்கியிருக்கிறார். இருப்பினும், பாடல் காட்சிகளில் அழகாக நடனமாடியிருக்கிறார்.

நாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. கிராமத்து பெண்ணாக ரசித்த இவரை, மாடர்ன் பெண்ணாக பார்க்கும்போதும் ரசிக்க வைக்கிறார். சிறு கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக சிங்கப்பூரை சேர்ந்த நார்லேவுக்கு அடிதடியான கதாபாத்திரம். இவர் பார்வையாலேயே அனைவரையும் மிரள வைக்கிறார்.

சதிஷ், ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, கருணாகரன் என காமெடிக்கு பலபேர் இருந்தாலும் படத்தில் பெரிதாக காமெடி எடுபடவில்லை. நாயகனின் அப்பாவாக வரும் ஞானசம்பந்தம் அனுபவ நடிப்பில் கவர்கிறார். ஆனந்தி படம் முழுக்க கவர்ச்சியை வாரி இறைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவுக்கு வழக்கமான முக்கோண காதல் கதையை சிங்கப்பூரில் வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதுமட்டும்தான் வித்தியாசமே தவிர, படத்தில் புதுமை என்று சொல்லும் அளவிற்கு எதுவுமில்லை.

படத்தில் லொக்கேஷன்கள் எல்லாம் தேடிக் கண்டுபிடித்து கண்களுக்கு குளிர்ச்சியாய் படமெடுத்திருக்கிறார். படத்தில் நிறைய கதாபாத்திரங்களை வீணடித்திருப்பதுபோல் தெரிகிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. சந்தோஷ் விஜயகுமாரின் கேமரா சிங்கப்பூர் அழகை வித்தியாசமான கோணங்களில் படம்பிடித்திருக்கிறது. அதேபோல், புதுமையான லொக்கேஷன்களையும் தேடிக் கண்டுபிடித்து அதை அழகாக காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘பறந்து செல்ல வா’ முயற்சி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online