MENUMENU

பலே வெள்ளையத் தேவா – திரை விமர்சனம்

நாயகன் சசிகுமார் படித்து முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா ரோகிணி போஸ்ட் மாஸ்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், ரோகிணிக்கு மதுரை பக்கத்தில் உள்ள வழுதூர் என்ற கிராமத்திற்கு பணி மாற்றம் வருகிறது.

அந்த ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் பாலா சிங், எந்த வீட்டிலும் டிஷ் ஆன்டெனா மாட்டக்கூடாது என்றும் தனது கேபிள் டி.வி.யையே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் அராஜகம் செய்து வருகிறார். இதனால், அந்த ஊரில் யாரும் டிஷ் ஆன்டெனா வாங்குவதே கிடையாது.

அதே ஊரில், கறிக்கடைக் காரரின் மகளான நாயகி தான்யா, மகளிர் சுயஉதவிக் குழுவில் பணியாற்றுகிறார். இவரை சசிகுமார் ஒருதலையாக காதலிக்கிறார். அதே ஊரில் வசிக்கும் கலகலப்பான தம்பதிகளான கோவை சரளாவையும், சங்கிலி முருகனையும் கைக்குள் போட்டுக் கொண்டு நாயகியை பின் தொடர்கிறார் சசிகுமார்.

இந்நிலையில், அந்த ஊரில் சசிகுமார் வீட்டில் மட்டும் டிஷ் ஆண்டெனா இருப்பதை பார்க்கும் பாலாசிங், ரோகிணியை அழைத்து மிரட்டுகிறார். இதனால், ரோகிணி தன்னுடைய வீட்டில் உள்ள டிஷ் ஆன்டெனாவை நீக்கி விடுகிறார். தாயை மிரட்டிய பாலா சிங்கை, அடித்து உதைக்கிறார் சசிகுமார். இதற்கு பழிவாங்க திட்டமிடுகிறார் பாலாசிங்.

அதன்படி, போலீஸ் நிலையத்தில் சென்று தன்னுடைய ஆட்களில் ஒருவனின் கையை சசிகுமார் உடைத்து விட்டதாக புகார் கொடுக்கிறார் பாலாசிங். அதன்படி, சசிகுமாரும் கைதாகிறார். போலீஸ் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் இருப்பதால், அவருக்கு அரசாங்க வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகிறது.

பின்னர், ஜெயிலில் இருந்து வெளியே வரும் சசிகுமார், விவசாயம் செய்யப்போவதாக தனது அம்மாவை சமாதானப்படுத்துகிறார். இதற்கிடையில், தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய பாலாசிங்கை தனது பாணியில் எப்படி வீழ்த்துவது என்று திட்டம் போடுகிறார். இறுதியில், அவரை எப்படி பழிவாங்கினார்? நாயகனும், நாயகியும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

சசிகுமார் தனக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அதேபோல், இந்த படத்திலும் தனக்கு ஏற்றமாதிரி கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். முற்பாதியில், கோவை சரளா, சங்கிலி முருகன் தம்பதிகளிடம் சேர்ந்துகொண்டு நாயகியை விரட்டும் காட்சிகளில் அவருக்கே உரித்த ஸ்டைலில் நடித்திருக்கிறார். நடனத்தில் மட்டும் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை.

நாயகி தான்யா, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி. பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் தனது தாத்தாவின் பெயரை காப்பாற்றியிருக்கிறார். கோவை சரளா – சங்கிலி முருகன் இருவரும் காமெடிக்காக இணைக்கப்பட்டிருந்தாலும், படத்தில் இவர்களுடைய காமெடி பெரிதாக எடுபடவில்லை.

செல்பி காத்தாயி என்ற கதாபாத்திரத்தில் வரும் கோவை சரளா படம் முழுக்க செல்பி எடுப்பதுபோல் வரும் இவருடைய நடிப்பு ரொம்பவும் செயற்கையாக இருப்பதுபோல் தெரிகிறது.

பாலா சிங் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ரோகிணி ரொம்பவும் தைரியமான பெண்ணாகவும், பொறுப்பான அம்மாவாகவும் வந்து தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி, படத்தில் எந்த கதாபாத்திரங்களும் மனதில் பதியவில்லை.

ஒரு கிராமத்து கதையில் காதல், காமெடி, பகை என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சோலை பிரகாஷ். ஆனால், படத்தில் காமெடி என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நிறைய தமிழ் சினிமாக்களில் அரைத்த மாவையே இதிலும் சேர்த்து அரைத்திருக்கிறார். அதனால், படம் பெரிய அளவில் ரசிகர்கள் மனத்தில் ஒட்டவில்லை.

ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு காட்சிகளை ரொம்பவும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறது. இவருடைய ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பக்கபலமாக இருக்கிறது. தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் பெரிதளவில் மனதில் பதியாவிட்டாலும், பின்னணி இசையில் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘பலே வெள்ளையத் தேவா’ பலவீனம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online